Alaioli
பினாங்கில் அங்காடி வியாபாரிகள் மற்றும்  வர்த்தக சமூகத்தினர் தினக் கொண்டாட்டம்!

பினாங்கு டிசம்பர் 4 - பினாங்கு மாநிலத்தில் 2025ஆம் ஆண்டுக்கான அங்காடி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சமூகதினர் தினக் கொண்டாட்டம் ஜோர்ஜ்டவுன் வட்டாரத்திலுள்ள “ஜென்” நட்சத்திர விடுதியில் வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்ட வேளையில், வர்த்தக வழிமுறைகள் தொடர்பில், சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்ற வெற்றியாளர்களுக்குப்  பாராட்டுக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பிரமாண்டமானக் கொண்டாட்ட விழாவுக்குச் சிறப்பு வருகைப் புரிந்திருந்த மாநில முதல்வர் சௌ கொன் இயாவ், மாநில உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந்திட்டத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய், சமூக மேம்பாடு மற்றும் முஸ்லீம் அல்லாத விவகாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சிவ் கிம், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக சமூகத்தினரின் அனைத்து தரப்பினரையும் கௌரவித்து உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்பாட்டின் பிரதிபலிப்பாக பற்பல இசை நிகழ்ச்சிகளும் நடனக் காட்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய வேளையில், உள்ளூர் வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வேண்டிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மாநகர் மன்றம் ஆற்றிவரும் பல்வேறான திட்டங்கள் தொடர்பில் இதன் உறுப்பினர் நிக்கலஸ் தெங் ஜீ வெய் ஆற்றிய வரவேற்புரையும் கவனத்தை ஈர்த்தது.

மாநிலத்தில் முன்பைக் காட்டிலும் தற்போது எல்லா சமூக மக்களிலும் பெரும்பாலோர் வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும்  இதன் பயனாகவே பல்லின சமூகத்தினரும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டு வருவதைக் காண முடிவதாகவும் தனது சிறப்புரையில் குறிப்பிட்ட முதல்வர் சௌ, வர்த்தக வாய்ப்புகளை மட்டுமின்றி, அவற்றை வழி நடத்தும் உபாயங்களுக்கும், மாநகர் மன்றத்தின் வசதிகளும் வழி காட்டுதல்களும் பெருமளவில் துணை நிற்பதை மறுப்பதற்கில்லை என்று புகழாரமிட்டார்.

மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அங்காடி வர்த்தக சமூகம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இங்கு நகர்ப்புற சமூகத்தினர் பலர் உணவு வளாகங்களில் அங்காடி வர்த்தகர்கள் வழங்கும் சேவைகளில் அதிகம் சார்ந்திருப்பதோடு, திருப்தியும் அடைவதை தாம் அறிவதாகவும் சுட்டிக் காட்டிய சௌ, இதனை தக்க வைப்பதற்கு ஏதுவாக, உணவு வணிக வளாகங்கள்  எப்போதும் பார்வையாளர்களின் வசதிக்காக சிறந்த மட்டத்தில் இருப்பதை வணிகர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது எனவும் கேட்டுக் கொண்டார்.

புதிய உள்கட்டமைப்புகளை வழங்குதல் மற்றும் சிறு வணிக சமூகத்தினருக்கான வர்த்தக வளாகங்கள் மற்றும் சந்தைகளை  மேம்படுத்துவதன் மூலம்,  உள்ளூர் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பினாங்கு மாநகராட்சியின்  பல்வேறான முயற்சிகளும் செயல்பாடுகளும் பாராட்டத்தக்கவை என்று அவர் எடுத்துரைத்ததோடு, இதன் மூலம் வணிக சமூகத்தினரை மாநகராட்சி தரப்பினர் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்ற உண்மை தெள்ளத் தெளிவுற நிரூபணமாகுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News