Alaioli
சிறந்த கல்வியாளர் எனும் நம்பிக்கை நட்சத்திர icon விருதினைப் பெற்றார் உப்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் இணை பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை

தி. கிரிஷன் 

கோலாலம்பூர், டிச 6 - கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் மாத இதழாக செயல்பட்டு வரும் நம்பிக்கை இதழ் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பல்வேறு துறையில் சாதித்து வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘நம்பிக்கை நட்சத்திர விருதுகளை வழங்கி வருகிறது. கலைத்துறை பிரபலங்கள், மேடைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா துறை ஆளுமைகள் என இன்னும் பல துறைகளில் சாதனையாளர்களாகவும் ஆளுமைகளாகவும் திகழ்பவர்களை முறையே நடுவர் குழுமத்தின் வாயிலாகத் தெரிவுச் செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.


அவ்வகையில் இவ்வாண்டு சிறந்த கல்வியாளர் எனும் நம்பிக்கை நட்சத்திர icon விருது உப்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் இணை பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்களுக்குக் கிடைக்கப்பெற்றது. இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக அவர் அலை ஒளி செய்தி ஊடகத்திடம் தமது கருத்தினைப்  பகன்றார்  தமிழ்ப்பணியைத் தமது  வாழ்நாளின் ஒரே நோக்கமாகக் கொண்டு 33 ஆண்டுகள் சேவையாற்றிய அவரின் சாதனை இவ்விருதின் வழியாக புலப்பட்டுள்ளது.


1993ஆம் ஆண்டு பத்துக்காஜா இடைநிலைப்பள்ளியில் தமது ஆசிரியப் பணியைத் தொடங்கிய இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணிதேவி,  மாணவர்களிடையே கற்பித்தல் திறன்  தொடர்பான அணுகுமுறை,  கலைத்திட்டத்தில் ஆழமான புரிதலால் விரைவில் பெரும் வரவேற்பையும் பாராட்டினையும் பெற்றார்.

அவரது வகுப்புகளில் தமிழ்மொழி பாடம் புத்தகப் பாடம் மட்டுமல்ல; அனுபவமாக, உணர்வாக, மாணவர்களின் வாழ்வில் பதியும் கல்வியாக மாறியது. ஒவ்வொரு மாணவரின் திறனைக்  கவனித்து, அவர்களை ஊக்குவித்து வளர்க்கும் திறன் கொண்ட கல்வியாளராக அவர் அமைந்தார். தொடர்ந்து 2001ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தின் ஆயேர் ஈத்தாம் இடைநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்ட அவர், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் முன்னேற்றத்திற்காக பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.


அவரின் திறமையும், தொடர்ந்து காட்டிய தலைசிறந்த நன்சேவையின் காரணமாக 2011ஆம் ஆண்டு சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (UPSI) பணியுயர்வு கிடைத்தது. உயர்கல்வித் துறையில் பணியாற்றும்  இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகமான மாணாக்கர்கள்,  முனைவர் பட்ட ஆய்வாளர்கள்,  தமிழக்கல்வி ஆர்வலர்களை உருவாக்குவதில் அவர் முதன்மைப் பங்கு வகித்தார்.


தமிழ்க்கல்விக்கான தமது ஆர்வத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கில், 2012 முதல் 2015 வரை தமிழ்நாட்டின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட  ஆய்வினை  மேற்கொண்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். மேலும், 2022ஆம் ஆண்டு அவர் இணைப்பேராசிரியர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 


தமிழ்ப்பணி ஒன்றே என் நோக்கு; மாணவர்கள் என்றுமே என் அணுக்கமான குடும்பம்,” என அவர் பெருமையுடன் தெரிவிப்பது, இவரது காலத்தால் அழியாத கல்விச் சேவையை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. 33 ஆண்டுகள் கல்வித்துறையில் தீவிரமாக செயல்பட்ட  சிறந்த கல்வியாளரின் பயணத்திற்கு  ‘நம்பிக்கை நட்சத்திர’ விருது இணையான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News