Alaioli
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை

தி. கிரிஷன் 

கூலிம், டிசம்பர்  7 - உடல் சிரமம்  தடையாக இருந்த போதிலும் மன உறுதியைத் தளர விடாமல், கெடா, கூலிமைச் சேர்ந்த ஆசிரியர் மதன் பாஸ்கரன் கடந்த சனிக்கிழமை MSU பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியருக்கான இளங்கலைப் பட்டத்தைப் பெருமையுடன் பெற்றார்.


ஆசிரியர் மதன்  18 வயதுக்குட்பட்ட காலத்தில் சாலை விபத்தொன்றில் சிக்கினார். இதன் விளைவாக அவரது வலது கை செயலிழந்தது. சிறு வயதிலேயே தமது ஆசைகளை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர். இருந்த போதிலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கைவிடாது கல்வியை மேற்கொண்டார்.


உடல் வலிமையில் மாற்றம் ஏற்பட்டாலும், அவரின் மன வலிமை மட்டும் மாறவில்லை. என்னால் முடியும் எனும் தாரக மந்திரத்தை வேத வாக்காக கொண்டு தமது இடது கையில் எல்லா வேலைகளையும் மேற்கொண்டு வந்தார்.


மற்றவர்கள் தடையாக எண்ணும் சூழ்நிலையே, ஆசிரியர் மதனுக்கு முன்னேறும் சக்தியாக மாறியது. கல்வியை விடாமல் தொடர்ந்து முயன்ற அவர், இன்று ஒரு ஆங்கில ஆசிரியராக கூலிம் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவரது கற்பித்தல் முறை பல மாணவர்களின் விருப்பத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளது.


மேலும் வாழ்க்கையை முன்னெடுக்கும் உறுதியோடு, இரவு நேரங்களில் ஒரே  கையைக் கொண்டு கிராப் வாகனத்தை ஓட்டி குடும்பத்திற்கும் தன்னிற்கும் வாழ்வு அமைத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. உடல் தடை இருந்தபோதிலும், முயற்சியாலும் மனவலிமையாலும் வெற்றியை அடைய முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக ஆசிரியர் மதன் பாஸ்கரன் திகழ்கிறார்.


இன்றைய இளைஞர்களுக்கு ஆசிரியர் மதன் பாஸ்கரன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.  அவரின் சாதனையை அலைஒளி செய்தி ஊடகம் வாழ்த்துகிறது.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News