Alaioli
மீள்திறன் கொண்ட உலகளாவிய நகரங்களுக்கான கூட்டமைவு  கருத்துக் களத்தில் பினாங்கு மேயர் பங்கேற்பு!

பினாங்கு டிசம்பர் 9 - உலகளாவிய நிலையில் மீள்திறன் கொண்ட அதீத வளர்ச்சிமிக்க நகரங்களுக்கான கூட்டமைவு கருத்துக் களத்தில் பினாங்கு மாநில மாநகரட்சி மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் மலேசியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இந்த ”மீள்திறன் நகரங்களின் 2025  கூட்டமைவு கருத்தரங்கம், இலண்டன் மாநகர் காண்டூய்ட் மன்றத்தில், அண்மையில் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.


21 ஆம் நூற்றாண்டில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு பாதுகாப்பாக, மீள்தன்மை கொண்ட நகரங்களை உருவாக்குவதற்காக, அதன் உறுப்பிய நகரங்களை மேம்படுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்தும் 46 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட உலகின் முக்கிய நகரங்களுடன் பினாங்கு மாநிலமும் அதன் வலைத்தளக் குழும உறுப்பியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


வளர்ந்து வரும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் போது நகரங்கள் எவ்வாறு மீள்தன்மையை வலுப்படுத்த முடியும் என்பது குறித்து விவாதிக்க, உலகெங்கிலும் உள்ள மேயர்கள், கொள்கை வகுப்பாளர்கள், காலநிலை மாற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புதுமைப்பித்தர்களை இந்த மதிப்புமிக்க உலகளாவிய மன்றம் ஒன்றிணைத்துள்ளது.


\"நகர்ப்புற மீள்தன்மை நிர்வாகம் - சிக்கலான தன்மை மற்றும் மாற்றத்தின் மூலம் நகரங்களை நிர்வகித்தல்\" என்றக் கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் களத்திற்கு, மீள்திறன் கொண்ட நகரங்களுக்கான  நிர்வாக இயக்குநர் லாரன் சோர்கின் இதர நகர்ப்புறத் தலைவர்களுக்கெல்லாம் முன்னணியாக நின்று தலைமை தாங்கினார்.


இந்த அமர்வுக்கு நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் வரிசை, தீவிர வானிலை, மக்கள்தொகை அழுத்தம், சமூகப் பொருளாதாரச் சவால்கள் மற்றும் நீண்டகால மீள்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்கொள்ளும் போது, நகர்ப்புற நிர்வாகம் குறித்த உலகளாவிய முன்னோக்கினை வெளிப்படுத்த உதவுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.


காலநிலையால் கடும் பேரிடர்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தயார் நிலைக்குரிய நடவடிக்கைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தொடர்பில், பினாங்கு மேயர் தன் கருத்தினைப் பதிவு செய்த வேளையில், கூட்டு முறையில் பொது விவகாரங்களை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள் மற்றும் உத்திகள் தொடர்பிலும் ஒத்துழைப்பு மார்க்கங்களுக்கு அவர் வழிகள் புகட்டியதுடன், பினாங்கை பசுமை மற்றும் அறிவார்ந்த  மாநிலமாக தொடர்ந்து தக்க வைக்கவும் ஊக்குவிக்கவும்  விவேகமிக்க நகரமாக முன்னடத்தி செல்வதற்கு, பினாங்கு  மாநகராட்சியின் மகத்தான பங்களிப்பையும் அதன்  உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார்.


இந்த மன்றத்தில், மேயருடன் பினாங்கு மாநகராட்சியின் நகர மேம்பாட்டுத் திட்டமிடல் துறை இயக்குநர், முகமது பஷீர் சுலைமான், முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.

Post Image

Leave a Comment
Trending News