Alaioli
தேசிய வகை டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 7 இன் மாணவர் நேர்த்தி நிறை விழா

தி. கிரிஷன் 


டப்ளின், டிசம்பர் 19 - கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வகை டப்ளின் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 7 இன் மாணவர் நேர்த்தி நிறை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 



மாணவர்களின் ஒழுக்கம், பொறுப்புணர்வு, தலைமைத்துவம் ஆகிய பண்புகளை வளர்த்தெடுத்து, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முதன்மை நோக்கமாக அமைந்தது. விழாவில் உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு வடிவேல், மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாமல் வாழ்க்கைத் திறன்களிலும் முன்னேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 


இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடைக்கு “ஸ்ரீ விவேகானந்தர் மேடை” எனப் பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து பள்ளி வாரியக்குழுத் தலைவர் திரு சுரேஷ் ராவ் ஜெகநாதன் கருத்துரைக்கையில், மாணவர்களின் பல்திறன்களை வெளிப்படுத்தி அவர்களுடைய மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்வதே இதன் நோக்கம் என்றார். 


மேலும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வாரியக்குழு சார்பில் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, பள்ளிக்கு ஒரு “ஸ்மார்ட் போர்டு” (Smart Board) பெற்றுத் தருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.


அதுமட்டுமின்றி, இவ்விழாவின் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் பதிவு முகாம் மீண்டும் பள்ளியின் வாரியக்குழு துணைத்தலைவர் திரு தியாகராஜன் வீராசாமி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.


 இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு மணியம் நாகலிங்கம் பேசுகையில், பள்ளி சுற்றுப்பகுதிகளில் ஏழு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் இன்னும் பள்ளியில் பதிவுச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது என்றார். அவர்களுக்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இந்நிகழ்ச்சி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது தங்களின் தலையாய கடமை எனவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, பள்ளி வாரியக்குழு ஆலோசகர் திரு கோபலகிருஷ்ணன் காளிமுத்து @கல்சிவா உரையாற்றுகையில், தற்போதைய பள்ளி கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதாக கூறினார். எதிர்காலத்தில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு பள்ளியை இடமாற்றம் செய்யும் தூரநோக்கு திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும், இது கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முயற்சி எனவும் குறிப்பிட்டார்.


இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளி வாரியக்குழு துணைத் தலைவர் திரு பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறிய பள்ளியாக இருந்தாலும், இப்பள்ளி நல்ல வசதிகளுடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவும், மாணவர்களுக்குப்  பாதுகாப்பான சூழலில் செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார்.


மொத்தத்தில், மாணவர் முன்னேற்றம், கல்வி மேம்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்நேர்த்தி நிறை விழா அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News