Alaioli
"தளபதி திருவிழா" அரசியல் மேடையாக மாறக்கூடாது.  மலேசியக் காவல் துறையினர்  கடும் எச்சரிக்கை

புக்கிட் ஜாலில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள 'தளபதி திருவிழா’ இசை நிகழ்ச்சியை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என மலேசியக் காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.


இந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே என்றும், அரசியல் பேச்சுகள், கோஷங்கள், சின்னங்கள் அல்லது அரசியல் கருத்துகள் கொண்ட நேரலைகள் அனுமதிக்கப்படாது என்றும் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Aidil Bolhassan தெரிவித்துள்ளார்.


எந்தவித அரசியல் அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


பிரபல நடிகர்  விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முழுநேர அரசியலுக்குச் செல்லும் விஜய்க்கு ரசிகர்கள் வழங்கும் பிரியாவிடை நிகழ்வாக இது அமைகிறது.


2026-ம் ஆண்டு தமிழக அரசியலில் இடம்பிடிக்கும் இலக்குடன், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என்ற கட்சியை தொடங்கி விஜய் தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.


பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உற்சாகம் காரணமாக நிகழ்ச்சி சட்ட வரம்புகளை மீறாத வகையில் நடைபெற வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு போலீஸ் நினைவூட்டியுள்ளது.


முன்னதாக, சில மலேசிய ரசிகர்கள் த.வெ.க தொடர்பான அடையாளங்களுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Post ImagePost Image

Leave a Comment
Trending News