Alaioli
சிலிக்கோன் தீவு உருமாற்றுத் திட்டம்  பினாங்கின் 2050 தூர இலக்கின்  தொழில்நுட்ப மய உந்துசக்தி!

பினாங்கு ஏப்ரல் 8-பினாங்கு சிலிக்கோன் தீவு உள்ளூர் திட்டத்தை 2050 எதிர்காலத் தொழில், நுட்ப மையமாக்கும் உந்துசக்தியின்விளம்பரம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு விழா, இங்கு பாயான் பாரு பகுதியிலுள்ள அமாரி நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நிகழ்ந்தது.


இந்த மதிப்புமிக்க விழாவை, பினாங்கு முதலமைச்சர் சௌகொன் இயாவ், உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந்திட்டத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் மற்றும் மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்துஅதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


இவர்களுடன், மாநில நிதி அதிகாரி டத்தோ சைரி மாட் அலி  பினாங்கு உள்கட்டமைப்பு கழகத்தின் (PIC) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ ஃபரிசான் டாருஸ்,மாநில நகர மற்றும் கிராமய திட்டமிடல் துறை இயக்குநர் டத்தோ ரோஸித்தா ஹமிட் ஆகிய மூவரும் முக்கியப் பிரமுகர்களாக உடனிருந்தனர்.


பினாங்கு சிலிக்கோன் தீவின் வளர்ச்சியானது, 2050 ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டுஉற்பத்திக்கு (GDP) குறைந்தது RM1.1 டிரில்லியன் பங்களிப்புடன், ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மூலோபாய முயற்சியானது, பிராந்திய அளவில் ஒரு உயர் தொழில்நுட்ப பொருளாதார மையமாக பினாங்கின் நிலையை வலுப்படுத்துமென்று நம்பப்படுகிறது.


இந்த உயர் தாக்கத் திட்டம் மாநில மற்றும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வினையூக்கியாக இருப்பதோடு, உற்பத்தி மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் போன்ற மூலோபாயத் துறைகளில்சுமார் 220,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பேராற்றலைக் கொண்டதாக விளங்குமென்று முதல்வர் சௌ இவ்விழாவின் தொடட்டவுரையில் வலியுறுத்தினார்.


சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை கொள்கைகளை ஒருங்கிணைத்து, சிறந்த நகர்ப்புற வடிவமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் சிலிக்கோன் தீவை மேம்படுத்துவதில் மாநில அரசின் அர்ப்பணிப்பையும் அவர் எடுத்துரைத்தார். இந்த அணுகுமுறையானது உலகளாவிய மற்றும் பிராந்திய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டதாகவும், அதன் மூலம் பினாங்கை எதிர்காலத்தின் ஒரு முக்கியப் பொருளாதார மையமாக உயர்த்தும் என்றும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஜியோபிஐஎம் (GeoBIM) தரவுத்தள தொழில் நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன், நில மீட்பு மூலம் முற்றிலும் புதிய நிலப் பகுதிகளில் உருவாக்கப்படும், மலேசியாவின் முதல் உள்ளாட்சித் திட்டம் என்ற வகையில் இந்த விவேகமிக்கத் திட்டம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைப்பது திண்ணமென்ற நம்பகத்தன்மைக்கும் இது வித்திட்டிருக்கிறது.


திட்டமிடப்பட்ட இந்த மேம்பாட்டுத் திட்டம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்த நிலைத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும், இதன் விளம்பரக் காலம் முழுவதும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க வேண்டுமென முதல்வர் கோ இவ்விழாவில் பொது வேண்டுகோள் விடுத்தார்.


Post ImagePost Image

Leave a Comment