பட்டர்வொர்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா மாரியம்மன் ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தீமிதித் திருவிழாவின் தொடக்கமாக, இன்று மாலை நடைபெற்ற கொடியேற்ற விழா மிகுந்த பக்தி பூர்வமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 5,000 பக்தர்கள் பங்கேற்று ஆன்மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கடற்கரையின் ஓரத்தில், பழைய துறைமுக சாலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், பட்டர்வொர்த் நகரத்தின் மிகவும் பழமையான இந்து கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. 172 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், மகா மாரியம்மன் தேவியின் தரிசனத்திற்காக நம்பிக்கையுடன் தரிசிக்கப்படும் ஒரு முக்கிய தலமாக இருக்கிறது.
வரலாற்று பின்னணி
இந்த ஆலயம் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கடலோர வர்த்தகச் சுழற்சி செழித்த காலத்தில், தென்னிந்திய வணிகர்களும் குடியேறிய தொழிலாளர்களும் தங்களுடைய பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் பின்பற்றி நிறுவப்பட்டது. நச்சுப்பாம்பு, வெப்பநிலை நோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் தெய்வமாக மாரியம்மன் வழிபாடு உருவெடுத்தது. இது சமூக ஒற்றுமையை மேம்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
திருவிழாவின் சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு, தீமிதித் திருவிழா மே 30, வெள்ளிக்கிழமை தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் உபயங்கள், வழிபாடுகள், தீமிதி, காவடி, இரத ஊர்வலம், கலைவிழாக்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்த திருவிழா பட்டர்வொர்த் நகரமே ஆன்மிக உற்சாகத்துடன் பொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கொடியேற்ற நிகழ்வு
இன்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலயத் தலைவர் கணேசன் லட்சுமணன் தலைமையில் நிர்வாக குழு, தொண்டர்கள் கலந்து கொண்டனர். பினாங்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் அவர்களும், அவர்தம் குழுவினரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ எஸ். பார்திபன் உட்பட பல்வேறு பிரமுகர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆகமச் சடங்குகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின், கரகம் மற்றும் கத்தி கொண்டு கரக பூசாரி பக்தர்கள் மத்தியில் குறி சொல்லி ஆசிபலன் வழங்கினார். பின்னர், கரகத்தை எடுத்து ஆடிய பூசாரி, பக்தர்கள் புடைசூழ ஆலயத்துக்குள் வருகை தந்து, கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி, திருவிழாவின் துவக்க விழாவை சிறப்பாக நிறைவு செய்தார்.
இவ்விழாவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆலயத் தலைவர் கணேசன் லட்சுமணன், செயலாளர் முருகன், பொருளாளர் சி. மோகன் ஆகியோர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் கூறினர்.