பட்டர்வொர்த், ஜூன் 7 -
பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில், தீமிதித் திருவிழாவை முன்னிட்டு ஈயக்கிட்டிங் எனப்படும் M.S.C. Smelting நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக சிறப்பு உபயத்தை ஏற்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த புனித நிகழ்வை, நிறுவனத்தின் முன்னணி பொறுப்பாளர் திரு. தினா மற்றும் அவரது தோழர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். அம்மன் அலங்காரம், சிறப்பு பூஜை, கும்மி, பக்திப் பாடல்கள் மற்றும் அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் பக்தர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தின. நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற முற்பட்டனர்.
“தீமிதித் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்கள் தங்களின் நேத்திய கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். இது அவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது,” என ஆலயத் தலைவர் திரு. கணேசன் லட்சுமணன் தெரிவித்தார்.
மேலும், “அம்மன் அருளால் அனைவரும் பாதுகாப்பாக வாழ, விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நம் உடமைகள் மற்றும் நலம் அனைத்தும் அம்மனின் பாதுகாப்பில் இருக்கட்டும் என அவர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
அழகிய அம்மன் அலங்காரம், உற்சாகமான கும்மி, நெஞ்சைத் துளைக்கும் பக்திப் பாடல்கள், பசிக்குத் தீர்வு தரும் அன்னதானம் இவற்றின் மூலம் இந்நிகழ்வு மட்டுமல்ல, பக்தர்களின் நெஞ்சங்களும் நிறைந்தன.
இந்த வகை சமூகக் கடமைகளில் தனதான பங்களிப்பை வழங்கிய M.S.C. Smelting நிறுவனத்தின் உபயம் சமூகத்திற்கு ஒரு நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது.