கிரிக், ஜூன் 9:
கிரிக் அருகே இன்று அதிகாலை நடந்த கோரமான சாலை விபத்தில் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நேரத்தில் மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தும், ஒரு MPV ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் உள்ள 13 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தீவிரமாக காயமடைந்த இரு மாணவர்கள் கிரிக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தனர். இதனுடன், ஏழு மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு வழங்குவதற்கான உத்தரவையும் உயர் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக, உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தனது சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழுமையான உதவியை வழங்கத் தயார் என தெரிவித்தார். மேலும், தேவையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியதற்கான அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.