Alaioli
242 பயணிகளுடன் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து – 100 க்கும் மேற்பட்டோர் பலி

அகமதாபாத், ஜூன் 12:

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக   விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பிரிட்டனின் லண்டன் நகரை நோக்கிய ஏர் இந்தியா விமானம் – AI 171 – பயணத் துவக்கம் செய்த 5 நிமிடங்களில் குடியிருப்புப் பகுதியில் விபத்துக்குள்ளானது.


242 பேர் பயணித்த விமானம் குடியிருப்புப் பகுதியான ஒரு கல்லூரிமீது  விழுந்தது  மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.


விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் ஆகிய 242 பேர் இருந்தனர். சம்பவம் இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகை விமானம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டு, விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில், பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் கூரையின் மீது விழுந்தது.  விமானம் விழுந்ததும் திடீர் என்று விமானம் தீப்பிடித்து, கரும்புகை விரிந்தது.


மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் -  விபத்து தகவல் கிடைத்தவுடன் விமான நிலைய பாதுகாப்பு துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காந்திநகரிலிருந்து 90 NDRF பணியாளர்கள் கொண்ட மூன்று குழுக்கள் விரைந்து சென்றுள்ளன. வதோதராவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.


பயணிகள் விவரம் - ஏர் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடாவைச் சேர்ந்தவர் உள்ளிட்டோர் விமானத்தில் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகள் உறவினர்கள் தொடர்பு கொள்ள 1800 5691 444 என்ற ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை -விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்தின் நிலை - சம்பவத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன  என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


மாநில முதல்வரின் பதில் -விமான விபத்தால் வருத்தமடைந்துள்ளேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.


ஏர் இந்தியா தலைவர் அறிக்கை - ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில், “இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். எங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமரின் செய்தியில் -  பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்த பேரழிவு பேருந்து செய்தி. பிரிட்டிஷ் குடிமக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது பிரார்த்தனைகள் பயணிகளுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் பின்புலம் - அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக   விமான நிலையம் நாடு முழுவதும் பரபரப்பாக செயல்படும் ஏழாவது பெரிய விமான நிலையமாகும். தினசரி 245 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2024-25 ஆண்டில் 1.3 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். புதிய ஒருங்கிணைந்த முனையம் 2026-ஆம் ஆண்டுக்குள் தொடங்கவுள்ளதுடன், ரூ. 31.30 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


இந்திய விமானப் போக்குவரத்துப் பணிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டு வருகின்றது. மேலும் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், ஏர் இந்தியா மற்றும் அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு:

ஏர் இந்தியா ஹாட்லைன் – 1800 5691 444

அதிகாரப்பூர்வ இணையதளம் – airindia.com.

Leave a Comment
Trending News