Alaioli
15வது எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர்



ஜார்ஜ்டவுன், ஜூன் 12- 

 எதிர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை பட்டர்வொர்த் ஜாலான் மாக் மண்டின் சாலையில் அமைந்துள்ள  பிக்கா அரங்கில் நடைபெறவுள்ள தமிழ் தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களின் எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டின் 15வது பதிப்பில், 30 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பினாங்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து, மலேசியாவின் புறநகர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (DHRRA) இந்த உச்ச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு மூன்றாவது முறையாக மலேசியாவில் நடைபெறுவது மட்டுமல்லாமல், முதல் முறையாக பினாங்கில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


மாநாட்டின் தலைவராக உள்ள டத்தோ சரவணன் சின்னப்பன் கூறுகையில், "உலகளாவிய தமிழ் வணிகம் மற்றும் தொழில்முறை வலைப்பின்னல்களை மேம்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்," என்றார்.

"பினாங்கு மாநிலத்தில் முதன்முறையாக( Rise Global Summit') நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய இராச்சியம், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.

மேலும், "இந்த உச்ச மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கிடையிலான உலகளாவிய வலையமைப்பை வலுப்படுத்துவதாகும். குறிப்பாக மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தொழில்முனைவோர்களுடன் வணிகத் தொடர்புகளை உருவாக்கி, அவை அனைத்துலக வணிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்றார் டத்தோ சரவணன்.


ஜார்ஜ்டவுனில் உள்ள பேவியூ ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமுவும் கலந்து கொண்டார். அவர், இந்த ஆண்டு மாநாட்டிற்கான "வா தமிழா" என்ற கருப்பொருளை வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு மாநாடு வணிக வாய்ப்புகள், மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப பகிர்வு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலா மற்றும் வணிகத் துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

அமர்வுகள் தமிழில் நடைபெறும் என்றும், விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், சில்லறை விற்பனை, சுகாதாரம், கல்வி, ரியல் எஸ்டேட், போக்குவரத்து மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 முக்கிய துறைகள் முன்வைக்கப்படும் என்றும் சுந்தராஜூ தெரிவித்தார்.

வணிக சமூகத்தினர், தொழில் நிபுணர்கள், முதலீட்டாளர்கள், அரசு மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

"பங்கேற்க விரும்பும் மலேசியர்கள் https://tamilrise.org/summit/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மூன்று நாள் அமர்வுகளுக்கான கட்டணம் மலேசியர்களுக்கு RM1,000 ஆகும். இந்த மாநாடு இந்திய சமூகத்திற்கும் மலேசியாவிற்கும் முன்னேற்றம் தரும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News