ஜூரு, ஜூன் 20 –
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வாரியத்தின் துணைத்தலைவர் மற்றும் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், அவதூறுகளுக்கெதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
நான் மட்டுமல்ல, எங்கள் அறப்பணி வாரியமும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரால் குறைகூறப்படும் சூழ்நிலையில் உள்ளோம். அந்த நபரின் அடையாளத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மிக விரைவில் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என்று அவர் தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அதன் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் தலைமையில், கல்வியை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி சமயம் என்பது எங்கள் வழிகாட்டி கோட்பாடாக இருக்கிறது. அந்த அடிப்படையில் நாங்கள் பல மாணவர்களுக்கு உதவியுள்ளோம். இதுவரை ஒரு மில்லியன் ரிங்கிட் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன், என்று அவர் விளக்கினார்.
தற்போது வீடியோக்கள் மூலமாக தன்னைத் தவறாக சித்தரிக்க முயற்சிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பதவிக்கு மீண்டும் வரவேண்டும், அல்லது பொருளாதார ஆதாயம் தேடவேண்டும் என்பதற்காக இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இது நம்முடைய புனிதமான சேவையை கேள்விக்குள்ளாக்குகிறது. எனவே இதை தடுத்து நிறுத்தும் வகையில் நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்/என்று அவர் உறுதியுடன் கூறினார்.
ஜூரு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற திருமுறை விழாவில் சிறப்புரையாற்றிய அவர், சமூகநலன் சார்ந்த சேவைகளில் எளிமையாகக் குற்றம் சாட்டுவதற்கான இந்த புதிய கலாசாரத்தை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற பக்கவாத உரையையும் முன்வைத்தார்.