தஞ்சோங் மாலிம்,ஜூன்30: பல்லினம் வாழும் இந்நாட்டில் நாம் நமது சமயம்,மதம்,பண்பாடு ஆகியவற்றை நன்முறையில் பேணி காத்திடல் வேண்டும்.
பள்ளிகளில் கல்வியோடு சமய சிந்தனையையும் அறிவையும் ஆழமாய் பதிவு செய்யவும் வேண்டும் எனவும் மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியநலப் பிரிவுக்கான ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் நினைவுறுத்தினார்.
இன்றையச் சூழலில் இந்நாட்டில் ஆலயம் சார்ந்த விடயங்கள் பெரும் அளவில் விஷ்பரூபம் எடுத்து வருகிறது.இதற்கு காரணம் விவேகமான முறையில் கையாளாமல் உணர்ச்சி வசப்பட்டு சிலர் செய்த தன்மூப்பான செயல்பாடுகள் தான் என்றார்.
ஆலய விவகாரங்களை நாம் சட்டரீதியாகவும் அணுகலம்; அல்லது ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையாலும் நன் தீர்வை காணலாம் எனவும் விவரித்த சிவநேசன் உணர்ச்சி வசப்படாமல் விவேகமாய் சிக்கல்களை எதிர்கொள்ள பேரா மாநில இந்து சங்கம் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறினார்.
கோலாலம்பூத் மஸ்ஜிட் இந்தியா ஆலயச் சிக்கலை முறையாக கையாளத் தவறியதால் தான் இன்று நாடு முழுவதும் இருக்கும் பெருன்பான்மையான ஆலயங்களுக்கு நில அலுவலகம் நோட்டீஸ் கொடுத்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
இருப்பினும்,பேரா மாநிலத்தில் ஆலய விவகாரங்களில் தாம் விவேகமாய் செயல்பட்டு வருவதாகவும் எந்தவொரு ஆலயமும் உடைப்படாது எனவும் கூறிய சிவநேசன் இந்திய நலப்பிரிவு வாயிலாக அதனை மிக கவனமாய் தாம் கையாண்டு வருவதாகவும் கூறினார்.
இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டார பேரவையின் 47வது திருமுறை ஓதும் போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில் சிவநேசன் இதனை குறிப்பிட்டார்.
முன்னதாக நடைபெற்ற திருமுறை ஓதும் விழாவிற்கு இவ்வட்டார தலைமையாசிரியர்களில் ஒருவர் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்பதை சுட்டிக்காண்பித்த சிவநேசன் மற்றவர்கள் வராதது ஏமாற்றமானது என்றார்.
குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மட்டுமே கலந்தும் கொண்டுள்ளனர்.இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளிலும் சமய நிகழ்ச்சிகளிலும் தலைமையாசிரியர்களும் நிறைவாக கலந்து கொள்ள வேண்டியது அவசியமென்றும் நினைவுறுத்தினார்.
முன்னதாக இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டார பேரவைக்கு வெ.10ஆயிரம்,தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி ஆலயத்திற்கு வெ.30ஆயிரமுக் கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வெ.5ஆயிரமும் மானியமாக வழங்குவதாகவும் சிவநேசன் அறிவித்தார்.