23 ஆவது ஆசியான் சதுரங்க விளையாட்டு- (வயது பிரிவினர்)போட்டி (chess) இன்று பிற்பகல் ஜார்ஜ் டவுன், புலாவ் திக்குஸ் பெர்ஜெயா தங்கும் விடுதியில் ஆரம்பமானது. நேற்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறும் இந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில் (வயது பிரிவினர்) 21 நாடுகளிலிருந்து 400 விளையாட்டாளர்கள் பங்கெடுக்கின்றார்கள்.
மலேசியா, சிங்கப்பூர்,வியட்நாம், இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை, கம்போடியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா,
தென்கொரியா, ஜப்பான், லாவோஸ் தீமோர் லஸ்திக், புரூணை, ஆஸ்திரேலியா, மக்காவ், மியன்மார், ஹாங்காங், நியூசிலாந்து என மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து விளையாட்டாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள வந்திருக்கும் எல்லா விளையாட்டாளர்களையும் பேராளர்களையும் நான் வரவேற்கிறேன். போட்டியில் வெற்றி தோல்வி இருக்கும். ஆனால் இது முக்கியமல்ல. விளையாட்டுப் போட்டியில் ஆற்றலோடு பங்கெடுப்பதே முக்கியம். பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் நீங்கள் விளையாட்டில் பங்கு கொள்வதோடு பினாங்கு தீவின் பல்வேறு \'யுனஸ்கோ\' சுற்றுலாத் தளங்களைப் பார்க்கவும், இங்குள்ள பல இனத்தவரின் பாரம்பரியம் பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும். விளையாட்டளர்கள் தங்கள் திறமையை அனுபவத்தை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு என ஆசியான் சதுரங்க விளையாட்டு போட்டியைத் திறந்து வைத்து இளைஞர், விளையாட்டு, சுகாதாரத் துறைகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் பேசினார்.
இம்மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் சதுரங்க விளையாட்டு போட்டியில் ஐந்து வயதிலிருந்து என்பது வயது வரை உள்ள பல்வேறு வயது பிரிவினர்களும் பங்கு கொள்கின்றனர். சதுரங்க விளையாட்டு மற்ற விளையாட்டுகள் போல் அல்ல. இந்த விளையாட்டில் ஒருவர் அறிவுத் திறனுடன் சிந்தனை ஆக்கத்துடன் செயல்பட வேண்டும். இந்த விளையாட்டில் நல் ஒழுக்கத்தையும் விளையாட்டளர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு நாட்டை சார்ந்தவர்களும் பிறரோடு நட்பும் தோழமையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட அங்கவீனர்களும் விளையாட்டில் கலந்து கொள்வது சிறப்பு என ஆசியான் சதுரங்க விளையாட்டு பேரவையின் அமைப்பாளர் இக்னேஷியஸ் லியோங் கூறினார்.
ஆசியான் சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பின் துணைச் செயலாளர் பிலிப் சான், ஆசியான் சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சகாபோல் நக்வானிஸ், 23வது ஆசியான் சதுரங்க
விளையாட்டு போட்டியின் தலைவர் சீ சியூ சி, பினாங்கு கண்காட்சி மாநாட்டு பிரிவின் முதன்மை நிர்வாகத் தலைவர் அஸ்வின் குணசேகரன், மலேசிய சதுரங்க விளையாட்டின் ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர் நூர் அமின் பின் அமாட் உட்பட மலேசிய மாநில சதுரங்க விளையாட்டு சங்கங்களின் தலைவர்களும் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.