சுங்கை,ஜூலை 04: பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக நவீன குடிநீர் கருவி பொருத்துவதற்கு மட்டுமின்றி அப்பள்ளியின் பிற தேவைகளுக்காகவும் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் முன் வைத்த கோரிக்கை ஏற்று அப்பள்ளி வெ.20 ஆயிரத்தை மானியமாக அறிவித்தார் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அ.சிவநேசன்.
சுங்கை சட்டமன்றத்திற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளும் வசதிகளும் எல்லா காலகட்டத்திலும் நன்முறையில் கண்காணிக்கப்பட்டு அதனைப் பூர்த்தி செய்தும் வருவதாகக் கூறிய சிவநேசன் அண்மையில் பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெயர்ப்பலகை தொடர்பில் வெளியான சர்ச்சை அவசியமற்றது என்றும் நினைவுறுத்தினார்.
அப்பெயர் பலகை தற்போது புதிதாக மாற்றப்பட்டு விட்டதாகவும்.அஃது மனித தவறுகளால் நிகழ்ந்த ஒன்று எனவும் குறிப்பிட்டார்.அச்சிக்கலை கலைய பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருடன் கலந்து பேசியதாகவும்;இனி இதுமாதிரியான சிக்கல்கள் சுங்கை தொகுதியில் எழக்கூடாது என கேட்டுக் கொண்டதாகவும் சிவநேசன் தெரிவித்தார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் நலன்,கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கவனத்தைச் செலுத்தி வரும் தாம் தனது சொந்த தொகுதி தமிழ்ப்பள்ளிகளின் மீது தனித்துவ கவனத்தையும் அக்கறையும் கொண்டிருப்பதாகவும் மேலும் கூறினார்.
தனது சேவை மையத்தில் பள்ளி தலைமையாசிரியர்,முன்னாள்,இந்நாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களோடு நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர் சிவநேசன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக,கடந்த 18 ஆண்டுகளாக சுங்கை வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைவான நிதியுதவியை செய்து வருவதாகவும்,ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் காலங்களில் கூடுதலான மானியங்களை வழங்கி எந்தவொரு பள்ளியின் கற்றல் கற்பித்தலும் துளி சிக்கலையும் எதிர்நோக்கிடக்கூடாது எனவும் தொடர்ந்து தாம் பெரும் பங்காற்றி வருவதாகவும் சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.
பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் போலவே இவ்வட்டாத்தில் தோட்டப்புறப் பள்ளியாக இயங்கி வரும் பீடோர் தகான் தமிழ்ப்பள்ளிக்கு அண்மையில் பெயர் பலகை பொருத்துவதற்காக தாம் வெ.2890ஐ வழங்கியதாகவும் நினைவுக்கூர்ந்த அவர் பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் தன்னை அணுகியிருந்தால் நிச்சயம் புதிய பெயர் பலகைக்கு தேவையான நிதியை வழங்கியிருப்பேன் என்றார்.
அதுமட்டுமின்றி,பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி நவீன வசதிகளோடு குளிரூட்டிக் கொண்ட வகுப்பறையில் மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதாகவும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு ஒப்ப அதற்கான செலவினத்தை தாம் மானியமாக வழங்கியதாகவும் சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
மேலும்,ஒவ்வொரு ஆண்டும் சுங்கை தொகுதிக்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைவான மானியத்தை வழங்கிடும் அதேவேளையில் ஆண்டு இறுதியில் மீதமிருக்கும் மானியத்தையும் இவ்வட்டாரத் தமிழ்ப்பள்ளிகளுக்கே தாம் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறினார்.அதுமட்டுமின்றி,இவ்வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் தனது சேவை மையத்தை எப்போதுமே அணுகலாம் என்றும் நினைவுறுத்தினார்.