Alaioli
பேராவில் ஆண்டுக்கு 80ஆயிரம் “பேஃக்” இரத்தம் தேவைப்படுகிறது – இந்தியர்கள் 11.40விழுக்காடு இரத்ததானம் செய்கிறார்கள்!!

சிலிம் ரீவர்,ஜூலை05: பேரா மாநிலத்தில் ஆண்டுக்கு 80ஆயிரம் “பேஃக்” (பை) இரத்தம் தேவைப்படுவதாகக் கூறிய மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் பேரா வாழ் மக்கள் இரத்ததானம் செய்வதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளையில்,பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் இரத்ததானம் செய்வதில் சீனர்கள் 48.32 விழுகாடும்,மலாய்காரர்கள் 39.12 விழுகாடும் இந்தியர்கள் 11.40 விழுகாடும் மற்றவர்கள் 0.76ஆக இருப்பதாகவும் கூறிய அவர் தொடர்ந்து இரத்ததானம் செய்வதில் அனைத்து இனத்தவர்களும் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் ஜூன் திங்கள் 14ஆம் தேதியை உலகத் இரத்ததான நாளாக அனுசரிக்கும் நிலையில் பேரா மாநில அளவில் அந்நாள் இன்று சிலிம் ரீவர் மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டபோது அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பேசுகையில் சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.

மேலும்,இரத்ததானம் செய்வோரில் இருபிரிவுகள் இருப்பதாகவும்;அவர்களில் ஒருதரப்பினர் தொடர்ச்சியாக இரத்தனம் செய்பவர்கள்.மற்றொரு பிரிவினர் புதிதாக இரத்ததானம் செய்பவர்களாகும் என்றார்.கடந்த 2024ஆம் ஆண்டின் புள்ளியல்படி தொடர்ச்சியாக இரத்ததானம் செய்வோர் 76.12 விழுகாடாகவும் புதிதாக இரத்ததானம் வழங்குவோர் 23.67 விழுகாடாகவும் தெரிய வந்துள்ளதாகவும் சிவநேசன் மேலும் கூறினார்.

அதேவேளையில்,பொது அமைப்பினர்களும் இயக்கங்களும் தொடர்ந்து இரத்ததானம் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.அவ்வகையில்,மலேசிய இந்து சங்கம் தொடர்ச்சியாக இரத்ததானம் முகாம்களை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருவதை பாராட்டுவதாகவும் கூறிய அவர் ஒவ்வொரு இயக்கமும் இவ்விடயத்தில் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில்,பொது இடங்களில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்ட ஒன்று எனவும் அது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வகை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.நெகிரி செம்பிலானில் அம்மாநில அரசு அதனை அறிவித்திருப்பது ஏற்புடையதே.அதேவேளையின்,பேரா மாநிலத்தில் பொது இடத்தில் மது அருந்தி தேவையற்ற சம்பவங்கள் நடைபெற்றதாய் இதுவரை பரவலாய் எந்தவொரு புகாரும் கிடைக்கப் பெறவில்லை என்றார்.

அதுபோலவே,மின்சிகரெட்டுக்கு சில மாநிலங்கள் தடை வித்தித்துள்ளன,சில மாநிலங்கள் தடைவிதிக்க ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன.பேரா மாநிலமும் இதுதொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் அஃது இன்னும் மூன்று மாதக்காலம் நீடிக்கலாம் எனவும் கூறினார்.

முன்னதாக புத்ராஜெயா சுகாதார அமைச்சும் மின்சிகரெட்டுக்கு தடைவிதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.அவ்வகையில்,தேசிய அளவில் அதற்கு தடைவிதித்தால் இன்னும் எளிதாக அச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

மின் சிகரெட்டால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் உற்று கவனிப்பதாகவும் அதற்கெதிரான நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சும் மாநில ரீதியிலான சுகாதார பிரிவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொண்டும் வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


Leave a Comment
Trending News