Alaioli
செயலாக்கமே வெற்றியை தரும் -  புரோடுவா மா. முனியாண்டி சூளுரை.



செபராங் ஜெயா, நவம்பர் 5- ஒரு மனிதனின் செயலாக்கமே அவரது வெற்றிக்கான முக்கியக் காரியாகும் என்று பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதியத் தலைவர் செ. குணாளனுக்காக நடைபெற்ற பாராட்டு விருந்தில் புரோடுவா மா. முனியாண்டி வலியுறுத்தினார்.


ஜெயா கெட்டரிங் அரங்கில், செபராங் ஜெயாவில்,  மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “எண்ணம் – நோக்கம் – செயல்” என்ற மூன்று கூறுகள் ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து பயணித்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்று மா. முனியாண்டி தனது தலைமையுரையில் குறிப்பிடினார்.


செயலாக்கம்தான் வெற்றியை உருவாக்கும். எண்ணம் மட்டும் போதாது, அதை செயலில் மாற்றும் தைரியம், தன்னம்பிக்கை, மற்றும் விடாமுயற்சி வேண்டும். இவை தான் ஒரு மனிதனின் நற்பெயர், சாதனை, மற்றும் தலைமைத்துவத்தை உயர்த்தும் அடித்தளங்கள் என அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தன்னலமற்ற சேவைக்கு பெயர் பெற்றவர் எனும் வகையில், சுங்கை பக்காப் சாலை விபத்தில் இரு சிறுவர்கள் தங்கள் கால்களை இழந்தபோது, அவர்களுக்கு நிரந்தர இருப்பிடமும் வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுத்தது அவரது மனிதநேய பணியின் உச்சமாகும் என்று மா. முனியாண்டி அவரை பாராட்டினார்.


பாராட்டு விருந்தை புரோடுவா மா. முனியாண்டி ஏற்பாடு செய்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதியத் தலைவரான செ. குணாளனை வாழ்த்தினர்.


தொடர்ந்து மா. முனியாண்டி பேசுகையில், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு வலுவான தளமாக இருந்து, மேலும் பல திறமையான எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் ஒவ்வொருவரிடமும் உருவாக வேண்டும். அதன்மூலம் சமூக விழிப்புணர்வும் அறிவார்வமும் வளர்ச்சியடையும்  எனக் கேட்டுக் கொண்டார்.


அவர் மேலும் கூறுகையில், செ. குணாளன் தலைமையில் சங்கம் புதிய உச்சங்களை அடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் எழுதிய நூல்கள் பலருக்கும் ஊக்கமளிப்பவையாக உள்ளன. குறிப்பாக, செபராங் ஜெயாவில் ‘தி லைட் சட்சத்திர’ விடுதியில் வெளியிடப்பட்ட அவரது நூல், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சிறப்பான வெளியீட்டு விழாவாக அமைந்தது என்று பாராட்டினார்.

செயலாக்கமே வெற்றியை தரும் -  புரோடுவா மா. முனியாண்டி சூளுரை.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் செ. குணாளனை வாழ்த்தி, அவரது தலைமையில் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று உறுதியெடுத்தனர்.

Leave a Comment
Trending News