Alaioli
பினாங்கில் புறாக்களை கட்டுப்படுத்தும் தொடர் நடவடிக்கைகள்!

பினாங்கு டிசம்பர் 2  பினாங்கு மாநிலத்தின் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் புறக்களின் பரவலான இனப் பெருக்கம் பல்வேறு சிக்கல்கள்
மற்றும் சங்கடங்களுக்கு இடமளிப்பதாலும், சுற்றுச்சூழலுக்கு மருட்டலாக உருவெடுப்பதாலும், இவற்றைக் கட்டுப்படுத்தும்தொடர் நடவடிக்கைகளில், மாநில மாநகர் மன்றம் தொய்வின்றி ஈடுபாடு காட்டி வருகிறது.



புறாக்களின் “ஹாட்ஸ்பாட்கள்” என்றழைக்கப்படும்  அவற்றின் ஈர்ப்பிடங்களை அடையாளம் கண்டு, அத்தகு  பகுதிகளில் இவற்றை குறி வைத்துப் பிடிப்பதற்கான உத்திகளில்  மாநகர் மன்றப் பணியாளர்கள் கவனம் செலுத்தி வரும்  நிலையில், அவ்வப்போது பலப் பறவைகளைப் பிடிக்கும் பணிகள்  இங்கு தொடர்ந்த வண்ணம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

       
அவ்வண்ணம் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை,  சொத்து மதிப்பீடு மேலாண்மைத் துறை, நகராட்சி சேவைகள்  துறை மற்றும் பொதுச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த மொத்தம்  43 மாநகர் மன்ற ஊழியர்களும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில்  தத்தம் ஆற்றலை வெளிப்படுத்திய நடவடிக்கைகளில், காலை, மாலை என்ற இரண்டு அமர்வுகளாக, இப்பணி அதிரடியாக  மேற்கொள்ளப்பட்டது.


இவ்விரு வகை முயற்சிகளின் வாயிலாக காலை அமர்வில் 582 புறாக்களும், மாலை அமர்வில் 318 புறாக்களும் பிடிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 900 பறவைகள் அன்றைய தினத்தில் வெற்றிகரமாக பிடிக்கப்பட்ட அதே வேளையில், இப்பணியின் போது காகக் கூடுகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment
Trending News