கோகி கருணாநிதி
ஜொகூர், டிச.8 —ஜொகூர் மாநிலத்தில் டெங்கு நோயின் ஆண்டு மொத்தப் பதிவுகள் கடந்த ஆண்டை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள நிலையில், நடப்பு வாரத்தில் புதிய நோய்வாய்ப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டின் 49ஆம் வாரம் வரை மாநிலத்தில் மொத்தம் 5,634 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்திலிருந்த 12,746 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 55.8 சதவீதம் குறைவு. இதில் 1,711 வழக்குகள் தொற்று பரவல் பகுதிகளிலிருந்தும், 3,923 வழக்குகள் தொற்று இல்லா பகுதிகளிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் வாராந்திர நிலையைப் பார்க்கையில், நோய்த்தொற்று மீண்டும் உயர்வை நோக்கில் செல்கிறது. 49ஆம் வாரத்தில் மட்டும் 120 புதிய டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் — இது 48ஆம் வாரத்திலிருந்த 96 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகம் என்பதைக் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும், ஜொகூர் பாரு மாவட்டம் அதிகபட்சமாக 76 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து கூலாய், குளுவாங், பாசீர் கூடாங், சிகாமட், மூவார், பொந்தியான் மற்றும் தாங்காக் மாவட்டங்களிலும் உயர்வு காணப்படுகிறது.
இந்த வாரத்தில் மாநிலத்தில் 14 புதிய தொற்று மையங்கள் உருவாகியுள்ளன; அவற்றில் 11 ஜொகூர் பாரு பகுதியில் மட்டுமே. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இவ்வரையிலும் மொத்தம் 567 தொற்று மையங்கள் பதிவாகியுள்ளன. 2024இல் இதே காலத்தில் 1,638 மையங்கள் இருந்ததை ஒப்பிடும்போது 65.4 சதவீத குறைவு காணப்படுகிறது.
இவ்வாரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆண்டு முழுவதும் இதுவரை 11 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன — இது கடந்த ஆண்டைவிட 45 சதவீதம் குறைவாகும் என்றார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு மற்றும் வெளிப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்றும் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை மாநிலம் முழுவதும் 7,497 அபராத அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன; இதில் 68 சதவீதத்திற்கான அபராதம் மக்கள் செலுத்தியுள்ளனர். இது இன்னும் பலர் வீட்டுச் சூழலில் கொசு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான கவனத்தைச் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது என்று லிங் தியான் சூன் கூறினார்.
அவர், மக்கள் வாரத்திற்குக் குறைந்தது 10 நிமிடங்கள் தங்களது வீடும் பணியிடமும் சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தண்ணீர் தேங்கும் பாத்திரங்களை மூடி வைப்பது, கொசு துடுப்பை அழிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற எளிய செயல்களே டெங்கு பரவலைத் தடுக்க மிகப்பெரிய பலன்களை அளிக்கும் எனவும் வலியுறுத்தினார்.
பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். பள்ளி பேருந்துகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் புகைமூட்டச் சிதறல் (aerosol) செய்யலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
மாநில சுகாதாரத் துறை தினசரி சமூக ஊடகங்கள் மற்றும் வானொலி வழியாக டெங்கு தடுப்பு தகவல்கள், வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்களையும் வெளியிடுகிறது.மொத்தத்தில், ஜொகூரில் டெங்கு நோய் பரவல் கடந்த ஆண்டைவிடக் குறிப்பிடத்தக்க வகையில் கட்டுக்குள் வந்துள்ளதாலும், வாராந்திர உயர்வு மக்கள் மீண்டும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.