Alaioli
இந்திய இளம் பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் — மாநாட்டில் ஒலித்த முக்கியக் கருத்துகள்

கோகி கருணாநிதி


ஜொகூர், டிச.8-

ஜொகூர் தமிழ்க் கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் மற்றும் ஜொகூர் மாநில ம.இ.கா இணைந்து நடத்திய இளம் பட்டதாரிகள் மாநாடு சமீபத்தில் கிரேண்ட் பேரகன் விடுதியில் உற்சாகமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து வந்த இளம் பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பு துறையின் தற்போதைய போக்குகள், வாழ்வியல் முன்னேற்றம், எதிர்காலத் திட்டமிடல் போன்ற முக்கியமான துறைகள் பற்றிய விவாதங்களும் வழிகாட்டுதல்களும் நடைபெற்றன.


டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பல்வேறு அம்சங்களில் பயனடைந்தனர். இயக்கத் தலைவர் கல்விச் செம்மல் நடராஜா சி. காளிமுத்து, மாநில ம.இ.கா. உடன் இணைந்து இந்த நிகழ்வு நடைபெறுவதைக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பாராட்டினார். இளம் பட்டதாரிகள் வளர்ச்சிக்காக மாநில ம.இ.கா வழங்கிய ஒத்துழைப்புக்கு மாண்புமிகு இரவீன்குமார் கிருஷ்ணசாமி அவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.


தொழில்துறையைச் சேர்ந்த மு. இளங்கோ தமது உரையில், நாட்டின் முன்னேற்ற தேசப்பாதையில் இளம் பட்டதாரிகளும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சி வேகத்தில் நாமும் முன்னேறவில்லை என்றால், பல முக்கிய துறைகளில் பின்தங்கும் நிலை ஏற்படும் எனவும், இம்மாநாடு இளம் பட்டதாரிகளுக்கான திசை நிர்ணயத்தில் உதவும் என்பதையும் அவர் தெரிவித்தார்.


மேலும், சொற்பொழிவாளர் லிங்கேஸ்வரன், இளம் பட்டதாரிகள் தங்களது தொழில் தேர்வில் உறுதியான எண்ணமும் நீண்டகால நோக்கும் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான தயாரிப்பும் அவசியம் என அவர் கேட்டுக் கொண்டார்.


ஜொகூர் திறன் மேம்பாட்டு மன்றம், சேமநிதி வாரியம், ஜொகூர் தொழிலியச் சம்மேளனம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுடனும், 14 தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து வேலை வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு பரந்த வேலைவாய்ப்பு தகவல்கள் கிடைத்தது மாநாட்டின் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அமைந்தது.


மாநாட்டின் நிறைவில், ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ம.இ.கா தலைவருமான  கி. இரவீன்குமார் அவர்களின் செயலாளர் சுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.


தமது உரையில், ஜொகூர் தற்போது தொழில்நுட்பம், அனைத்துலகக் கல்வி, போக்குவரத்து, தொழில்துறை, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் பலத்த முன்னேற்றப் பயணம் மேற்கொண்டு வருவதையும், இந்த வளர்ச்சி சூழலில் இளம் பட்டதாரிகள் திறன்களை வளர்த்துக் கொண்டு உயர்ந்த இலக்குகளை அடைய இந்த தருணம் மகத்தான வாய்ப்பாக இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News