Alaioli
வியாபாரமாகும் துயரம்..!!

செ.குணாளன்

​வரலாற்றின் ரத்தக் கறையும் போலி மேடைகளும்

​ஈழத் தமிழ் மக்கள் கொடூரமாகக் கொன்றுகுவிக்கப்பட்ட அந்த முள்ளிவாய்க்கால் பேரவலம், உலகத் தமிழினத்தின் நெஞ்சில் என்றுமே ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் ஒரு கருப்பு நாள்.


முள்ளிவாய்க்கால் என்பது வெறும் நிலப்பரப்பல்ல, அது தமிழ் மக்களின் கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட ஈகத்தின் சாட்சி. ஆனால், அந்தப் பெருந்துயர தருணத்தை அன்றும் இன்றும் தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களின் பட்டியல் இன்று நீண்டுகொண்டே போகிறது. மேடைகளில் தொண்டை கிழிய முழங்கியவர்கள், இரக்கத்தைக் கோரி கடிதங்கள் எழுதியவர்கள், உணர்ச்சியைத் தூண்டும் வசனம் பேசியவர்கள் எனப் பலரும் இன்று தங்களின் முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு உலா வருகிறார்கள்.


​அன்று ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததாகக் காட்டிய பலர், இன்று "சனாதனமே உயிர்" என்று தங்களின் சுயரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் சுயநல அரசியலுக்காகவும், அதிகாரப் பசிக்காகவும் அன்று துயரத்தை அள்ளித் தந்த இலங்கையையே இன்று உயர்த்திப் பிடிக்கும் அவலமும் நடக்கிறது. தேர்தல் களம் வந்துவிட்டால் போதும்... "நான் பிரபாகரனின் தம்பி", "நான் புலிகளின் தோழன்" என்று வேடமிட்டுக்கொண்டு வாக்கு வேட்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். இவர்களின் போலித்தனத்திற்கு கட்டுரை, கவிதை, புதுக்கவிதை என இலக்கிய வடிவங்களும் தப்பவில்லை. துயரத்தை வியாபாரமாக்கும் இவர்களின் பிழைப்புவாதம் வெட்கக்கேடானது.


​வணங்காமண்ணும் நழுவிய தத்துவவாதிகளும்


​வரலாறு எதையும் மறந்துவிடுவதில்லை. ஈழ மக்கள் உணவின்றி, மருந்தின்றி, சொந்த மண்ணிலேயே அகதிகளாக அவதிப்பட்டபோது, அவர்களின் துயர் துடைக்க வணங்காமண் கப்பல் ஈழம் நோக்கிப் புறப்படுகிறது, அதற்கு உங்களால் இயன்ற 10 வெள்ளி (பணம்) கொடுத்து உதவுங்கள் என்று உரிமையோடு கேட்டபோது, இந்தத் தத்துவவாதிகளின் முகம் எப்படி மாறியது என்பதை உலகம் பார்த்தது.

​\"என்னடா, என்னை ஏதேனும் சட்டப் பிரச்சனையில் மாட்டிவிடப் பார்க்கிறாயா?

​என்று பயந்து நடுங்கி, நழுவி ஓடியவர்கள்தான் இன்று மேடைகளில் தத்துவம் பேசும் இந்த உத்தமர்கள்!


​1987 முதல் 2010 வரை ஈழ விடுதலைக்காகத் தங்களின் முழு மூச்சையும் தந்து, அறம் பாடி, தியாகம் செய்த மாமனிதர்களையும், ஈழ மக்களின் உயர்களை விடியோ எனப்படும் காணொளியில் பார்த்துவிட்டு, கையில் கழுத்தில் இருந்தனை கழற்றி கொடுத்த உணர்வு மிக்கத் பாமரனையும்,  அண்ணன் ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவுக்கு கவிதை எழுதிய உணர்ச்சிக் கவிஞனையும் பார்த்து, நீங்கள் என்ன ஈழ மண்ணுக்கு கவிதை மட்டும்தான் எழுதுவீர்களா? என்று கேட்டு வைத்த அரசியல் ஞானசூனியங்கள் சிலர் நீங்கள் போர்களத்திற்கு களத்திற்கு வரமாட்டீர்களா?" என்று கேட்ட அறிவிலிகள். இவர்கள் கேள்வி கேட்டபோதே இவர்களின் தரம் என்னவென்று அம்பலமாகிவிட்டது. ஆயுதப் போராட்டத்திற்கு இணையாக அறிவுத்தளத்திலும், ராஜதந்திர தளத்திலும் போராடிய மாமேதைகளைத் தரம் தாழ்த்திப் பேசியவர்களின் வண்டவாளம் அன்றே தண்டவாளம் ஏறியது.

​சனாதனப் பிழைப்புவாதமும் போலி நீலிக்கண்ணீரும்

​என்றுமே சனாதனத்தின் சாதிய, மதவாதப் பிரிவினைகளை எதிர்த்துப் பேசும் உண்மையான, நேர்மையான தமிழர்கள் மட்டுமே ஈழ மக்களின் கண்ணீரையும், அவர்களின் வலியையும் உண்மையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். மனிதர்களைப் பிறப்பால் பிரித்து வைக்கும் சனாதனம் பேசும் எவனுக்கும், ஈழத்தில் வீழ்ந்த நம் தொப்புள்கொடி உறவுகளின் வலி புரிய வாய்ப்பில்லை.

​ஆனால் இன்று நிலைமை என்ன? குரங்குகளைப் போல் தங்களின் சுயநல அரசியலுக்காக மரம் விட்டு மரம் தாவி, கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு பிழைப்பு நடத்தும் கூட்டம் இன்று சனாதனம் பேசுகிறது. அதே வாயால் மே 18 வந்துவிட்டால் போதும், போலி நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறது.

​ஆனால், விளம்பர வெளிச்சம் இல்லாமல், மேடை ஆரவாரங்கள் இல்லாமல், ஈழ மக்களின் துயர் துடைக்க நிஜமாகவே உழைத்த, இன்றும் உழைத்துக் கொண்டிருக்கின்ற இனமானத் தோழர்கள் பொதுத்தளத்தில் அமைதியாகத் தங்களின் பயணத்தைத் தொடர்கிறார்கள். அன்று ஒரு 10 வெள்ளி கொடுத்து உதவக்கூட துப்பில்லாத, துணிவில்லாத கோழைகளின் வாய் மட்டும்தான் இன்று கிழிந்த தோல் முரசாகக் கூச்சலிடுகிறது. அந்தோ பரிதாபம்! இவர்களின் போலித்தனத்தைக் கண்டு காலம் சிரிக்கிறது.

அறிவற்றவர்களின் அறியாமை


​தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக்கொள்ளக்கூட மனமில்லாமல், தமிழரின் அடையாளத்தையே சிதைக்கத் துடிக்கும் இவர்களுக்கு, ஆண்டுக் கணக்கே தெரியாமல் குழம்புபவர்களுக்கு... மே 18 என்ற இனப்படுகொலை எந்த ஆண்டு நடந்தது என்றா தெரியப்போகிறது?

​வரலாற்றுப் பிரக்ஞையும் இல்லாத, இன உணர்வும் இல்லாத இந்த அரசியல் வியாபாரிகளின் முகத்திரையைக் கிழித்து எறிவதுதான், முள்ளிவாய்க்காலில் மடிந்த நம் உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். துயரங்களை மூலதனமாக்கிப் பிழைக்கும் கூட்டத்தை தமிழ் சமூகம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டிய தருணம் இது!-Alaiolinews

Post Image

Leave a Comment