சென்னை: தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நாயகி ஆக நடித்து அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி என அழைக்கப்பட்ட சரோஜாதேவி தனது 87 வது வயதில் வயது முதிர்வால் காலமானார். இதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் திரை உலகம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் சரோஜாதேவி. கன்னட படமான மகாகவி காளிதாஸ் படத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1958 ஆம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஸ்ரீதரின் கல்யாண பரிசு அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்று கொடுத்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். குறிப்பாக அன்பே வா, ஆலயமணி, கல்யாண பரிசு, எங்க வீட்டுப் பிள்ளை என சரோஜாதேவி நடித்த அனைத்து படங்களும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. கதை சொல்லும் கண்கள், உணர்ச்சி பொங்கும் முகம் என ரசிகர்கள் சரோஜா தேவியை தலையில் வைத்து கொண்டாடினர். ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நடித்தார் என சொல்வார்கள்.
தமிழ் கன்னட திரை உலகில் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் பெருமை பெற்றவர். நடிகை சரோஜாதேவி இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் விருதுகளையும், மாநில அரசுகளின் விருதுகளையும் அள்ளிக் குவித்தவர்.இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரோஜாதேவி, கடைசியாக சூர்யாவின் ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.