கோகி கருணாநிதி
ஜொகூர் பாரு, டிச. 4 ஜொகூர் மாநிலக் கல்வித்துறையின் முன்னெடுப்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, STEMக் கல்வி, மற்றும் கண்ணாடி மீளமைப்பு தொழில்நுட்பத்தை மாணவர்களிடத்தில் ஊக்குவிக்கும் நோக்குடன், SWM ஏற்பாட்டில் “Cabaran Kaca Pun Boleh” எனும் கருப்பொருளைக் கொண்டு மாநில அளவிலான போட்டி ஜொகூர் பாருவில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமுள்ள பல்வேறு மாவட்டங்களின் பள்ளிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் தங்கள் அறிவு, திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமைச் செயல்திறன்களை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த பெரியளவிலான போட்டியில், பொந்தியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே தமிழ்ப்பள்ளியான ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி இரண்டு முக்கியப் பிரிவுகளில் பங்கேற்று மாநில அளவில் தங்கள் திறனை நிரூபித்தது.
கண்ணாடி புட்டிகளை மீளப் பயன்படுத்தி அறிவியல் அடிப்படையில் பயனுள்ள புதிய மாதிரிகளை உருவாக்க வேண்டிய STEMப் பிரிவில், அவர்கள் மிகுந்த ஆராய்ச்சி, முயற்சி மற்றும் படைப்பாற்றலுடன் தனித்துவமான திட்டத்தை வடிவமைத்தனர். LED ஒளி அமைப்பு, மறு சுழற்சி கூறுகள், செயல்முறைக்கேற்ப உருவாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த மாதிரி, மாநிலம் முடிவதிலிருந்தும் வந்த பல STEM புத்தாக்கங்களில் முன்னிலை பெற்று சிறந்த 10 அணிகளில் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது. இதனை அங்கீகரிக்கும் வகையில் குழுவிற்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இது பள்ளிக்கான முக்கியமான முதல் மாநில அளவிலான STEM அங்கீகாரமாகும்.
மாணவர்கள் பங்கேற்ற கலைத்திறன் காணொளிப் போட்டி பிரிவிலும், ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி உருவாக்கிய காணொளி மாநிலத் தரத்தில் உயர்ந்த மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது. கண்ணாடி மீளமைப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த செய்தி, படைப்பாற்றல் நிறைந்த காட்சிகள், உணர்ச்சியைத் தொடும் கதை அமைப்பு, தொழில்முறைத் தொடுத்துக் கொண்ட தொகுப்பு ஆகியவை நடுவர் குழுவின் பாராட்டைப் பெற்றன.
