Alaioli
தெலுக் பாரு தமிழ்ப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு சிவநேசன் நடவடிக்கை – விண்ணப்பம் செய்யுமாறு வலியுறுத்து!!

தெலுக் பாரு தமிழ்ப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு சிவநேசன் நடவடிக்கை – விண்ணப்பம் செய்யுமாறு வலியுறுத்து!!

பீடோர்,ஜூலை03: பாகான் டத்தோ தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியை புதிய நிலத்தில் கட்டியெழுப்புவது தொடர்பில் கல்வி துணையமைச்சர் வோங் கா வோவுடன் தாம் பேசியிருப்பதாகவும் புதிய பள்ளிக்கான விணப்பத்தைப் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர்  நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

தோட்டத் துண்டாடலில் பள்ளியின் நிலம் சீனர் ஒருவரின் கைக்குப் போன நிலையில் அப்பள்ளிக்கு புதிய நிலம் அடையாளம் காண்பது,புதிய கட்டிடம் எழுப்புவது ஆகியவற்றில் நீண்ட சிக்கலுக்கு விரைவில் முடிவு காணப்படவிருப்பதாகவும் அதற்கான விண்ணப்பத்தைப் பள்ளி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவநேசன் பள்ளியின் வாரியக்குழுத்தலைவர் திரு.நாகேந்திரன் மற்றும் அப்பள்ளிக்காக  தன் சொந்த நிலத்தை வழங்கிய டத்தோஶ்ரீ குப்புசாமி ஆகியோரிடம் இன்று தெரிவித்தார்.

இத்தோட்டம் விற்கப்பட்ட போது பள்ளிக்கூடம் இருக்கும் நிலம் சீனர் ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டது.நில உரிமையாளார் நிலத்தை கையகப்படுத்த முற்பட்ட போது சமூக சேவையாளர் டத்தோஶ்ரீ குப்புசாமி தனது சொந்த நிலத்தை அப்பள்ளிக்கு வழங்கிட முன் வந்தார்.2011ஆம் ஆண்டில் நிலத்தை பள்ளிக்கு அவர் வழங்கியபோதிலும் சில சிக்கல்களால் பள்ளிக்கூடத்தை அங்கு கட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு,அதாவது நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக டத்தோஶ்ரீ குப்புசாமி வழங்கிய நிலத்தில் புதிய தமிழ்ப்பள்ளிக்கான அடிப்படை வேலைகள் தொடங்கப்பட்டனர்.அன்றைய செடிக் (மித்ரா) வாயிலாக வெ.4 மில்லியனுக்கான மாதிரி காசோலையும் வழங்கப்பட்டது.2018 தேர்தலுக்குப் பின்னர் பள்ளியும் கட்டவில்லை,அந்த பணமும் என்னவானது என்று தெரியவில்லை எனவும் சிவநேசன் கூறினார்.

முன்னதாக 2018இல் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தாம் பதவியேற்ற போது இப்பள்ளி பிரச்னைக்காக தன்னை வாரியக்குழுவும் நிலத்தை இலவசமாக வழங்கிய டத்தோஶ்ரீ குப்புசாமியும் சந்தித்தாக நினைவுக்கூர்ந்த சிவநேசன் நிலத்தை முதலில் குப்புசாமியின் பெயரிலிருந்து பள்ளியின் வாரியக்குழுவின் பெயருக்கு மாற்றியதாக விவரித்தார்.

பெயர் மாற்றத்திற்குப் பின்னர் அப்போதைய துணை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு இப்பள்ளி விவகாரத்தைத் தாம் கொண்டு சென்றதாகவும் கூறினார்.பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பின்னரும் இப்பள்ளி விவகாரம் தீர்வை எட்டாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கல்வி அமைச்சுக்கு இதுவரை முறையான விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளாததும் புதிய பள்ளிக்கூடம் கட்டப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்பதையும் சிவநேசன் விளக்கினார்.

இந்நிலையில்,இன்று பீடோரிலுள்ள அவரது சேவை மையத்திற்கு வருகை புரிந்த வாரியக்குழு தலைவர் மற்றும் சமூகச்சேவையாளர் குப்புசாமி ஆகியோரிடம் பள்ளி நிர்வாகத்தை முறையாக விண்ணப்பம் செய்யக்கோரி வலியுறுத்தியதோடு துணை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு இப்பள்ளி விவகாரத்தைக் கொண்டு சென்று விட்டதாகவும் குறிப்பிட்டார்.

துணை கல்வி அமைச்சர் சிவநேசனின் கோரிக்கையை ஏற்று முறையான விண்ணப்பத்தைப் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டால்,புதிய பள்ளிக்கூடம் கட்டுவதிலும் சிக்கல் இருக்காது என கூறியதையும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.

மேலும்,இப்பள்ளி விவகாரம் தொடர்பில்  மாவட்ட,மாநில கல்விதுறைகளோடு கல்வி அமைச்சின் கவனத்திற்கும் முறையான கடிதம் அனுப்பவும் கேட்டுக் கொண்ட அவர் இப்பள்ளிக்கூடம் புதிய இடத்தில் கட்டப்பட்டால் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாய் உயரும் என்றார்.தற்போது அப்பள்ளியில் 30 மாணவர் மட்டுமே பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment
Trending News