Alaioli
திரிசூலத்தை காலால் மிதித்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரிக்கு அரசு என்ன தண்டனை வழங்கவிருக்கிறது;  பாப்பா ராய்டு கேள்வி.

எஸ்.எஸ்.மணிமாறன் 

ஷா ஆலம். மார்ச் 10.   இறை நம்பிக்கையில் ஆழமான ப்பற்றுதலும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பக்தர்களின் இந்து வழிப் பாட்டுத் தலங்களின் தலைவாசலில் வைக்கப்பட்டுள்ள புனிதத்தன்மை நிறைந்த திரி சூலம் , அம்பிகையின் அவதாரம் என வணங்கி வழிபட்டு வரும் வேளையில், தமிம் டாஹ்ரி என்பவர் ஒரு வழிபாட்டுத் தலத்தின் வாசலில் அமையப் பெற்ற திரிசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்திய விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், இந்த நடவடிக்கையை தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் குற்றம் இழைத்த நபருக்கு உரிய தண்டனையை அரசும், காவல் துறையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தமது வேண்டுகோளை முன் வைத்தார்.


நீண்ட நெடுங்காலமாக இந்த நாட்டில், மலாயாவாக இருந்த காலம் தொட்டு ஆங்காங்கே வழிபாட்டுத் தலங்கள் தோன்றிய போது, இறைவன் நம்மை கை விட மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வேண்டி, காடு மேடுகளை அழித்து வனப்பும் செழிப்பும் மிக்க நாடாக மாற்றிய இந்திய பாட்டாளிகளும், மத நல்லிணக்கத்தை மதிக்கின்ற சகோதரர்களுக்கு தமிம் டாஹ்ரி என்ற வன்மம் பிடித்த மனிதர் செய்யும் கைங்கரியமா அல்லது இழிச் செயலா இது? என்று அவர் கடுமையாகச் சாடினார். நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப் பட்டுள்ள கடமைகள் பிரகாரம் இந்து வழிப் பாட்டுத் தலங்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டியவர்கள் அவர்களே. தனிமனிதரின் ஆட்டமும் அடக்கமில்லா ஆர்ப்பாட்டமுமானச் செயல்களை அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய  பொறுப்பும் அரசின் மேல்மட்ட தலைவர் களுடையதே. நாடு நலம் பெறவும் சுபிட்சமாக அமைதியாகப் பயணிக்க வேண்டும் எனில், சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகள் இனியும் தாமதம் செய்யாமல் விரைவாகச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாப்பா ராய்டு உத்தரவிட்டார். 


இஸ்லாம் சமயத்தின் புனித நூலாம் அல்..குர்ஆனை மிதித்தக் குற்றத்திற்காக இருவர் மீது தண்டனை வழங்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வரும் இந்த நேரத்தில், புனிதமான திரி சூலத்தை காலால் மிதித்து சேதப்படுத்திய தமிம் டாஹ்ரிக்கு இதே போன்ற நடவடிக்கையை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இந்து பக்தர்கள் மட்டும் இன்றி, தாமும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் குறிப்பிட்டார்.

Leave a Comment
Trending News