Alaioli
தெலுக் இந்தான்  சித்ரா பௌர்ணமி விழாவின் போது நெகிழியை பயன்படுத்த வேண்டாம்!  உணவை விரயமாக்க வேண்டாம்!  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

தெலுக் இந்தான் உட்பட நாட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கொண்டாடப்பட விருக்கும் சித்ரா பெளர்ணமியை பசுமை சமய விழாவாக கொண்ட்டாடும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


மே 1 ஆம் தேதி  சித்ரா பௌர்ணமி விழாவின் போது, ​​பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் எல்லா விதமான நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நினைவு படுத்தியுள்ளது.


தன்னார்வ அமைப்புக்களின் பந்தல்களில்  வழங்கப்படும் உணவை வீணாக்க வேண்டாம் என்றும் பினாங்கு பயனீட்டாளர்  சங்கத்தின் கக்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் கேட்டுகொண்டார்



தெலுக் இந்தானில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் இந்த விழா பெருந்திரளான மக்களுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


சித்திரை மாதத்தின் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி, தமிழர்களின் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு நாளாகும்.


இந்த நாள் ஆன்மீக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


சித்ரா பௌர்ணமி கர்மங்களைக் கணக்கிடும் நாள். தமிழர்களின் பாரம்பரியக் தினங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களில் ஒன்று சித்ரா பௌர்ணமி.


சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தருக்குசிறப்பு வழிபாடுகளை செய்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நல்ல கர்மங்கள் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சுப்பாராவ்.


மலேசியாவின்சின்ன பழனி என அழைக்கப்படும்    தெலுக் இந்தான் தண்டாயுதபாணி கோவில் சித்ரா பெளர்ணமிக்கு மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.


இந்த ஆண்டு ஏறக்குறைய  சுமார் 100,000 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.


அண்டை நாடுகள் உட்பட மலேசியா முழுவதிலுமிருந்து பக்தர்களும் பொதுமக்களும் இந்த சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்துகொள்வார்கள் என நம்பப்படுகிறது.



சித்ரா பௌர்ணமியின் போது, ​​இலவச உணவு மற்றும் பானங்களை வழங்கும் தண்ணீர் பந்தல்களை  அமைக்கும் பொது அமைப்புகளும் மற்றும் தனிப்பட்டோர்  ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள், பாலிஸ்டிரீன் எனப்படும் நுரைப்பம் கொள்கலன்கள் மற்றும் கோப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக சுப்பாராவ் தெரிவித்தார்.


அதற்குப் பதிலாக, அவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கோப்பைகள், அல்லது மக்கும் தன்மையுள்ள இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.


நாடு முழுவதும் பண்டிகைகள் கொண்டாடப்படும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைப்போர் நெகிழி தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.


 இதற்கு இவர்கள் கூறும் காரணம் தாங்கள் பெரும் கூட்டத்தினருக்கு உணவு பரிமாறுவதால், இந்த கொள்கலன்கள், கரண்டிகள் மற்றும் கோப்பைகளைப் பயன்படுத்துவதற்கு வசதியையே காரணமாகக் இருக்கிறது என கூறுகின்றனர்.


இருப்பினும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அதிகப்படியான கழிவுகளை உருவாக்காத சிறந்த வழிகளில் உணவைப் பரிமாறலாம்.


நெகிழிகள் மக்குவதில்லை என்பதையும், \"மக்கும்\" மற்றும் \"உரமாகும்\" என்று கூறப்படும் நெகிழிகள் எளிதில் மக்குவதில்லை என்பதையும், அவை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே சிதைவடைகின்றன என்பதையும் பக்தர்களும் பார்வையாளர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.


நெகிழி மாசுபாடு, மக்களுக்கும் பூமிக்கும் மிக அவசரமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக வேகமாக உருவெடுத்துள்ளது.


பண்டிகைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் எவ்வளவு அதிகமாக நெகிழிகள் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு நெகிழி கழிவுகள் சுற்றுச்சூழலில் கசிந்து இறுதியில் மாசுபாடாக மாறுகிறது.


ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினால் ஏற்படும் அச்சுறுத்தல், பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கவலையளிக்கிறது.


ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு மாற்றாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துதல்,  உணவுத் தட்டுக்கள், இலைகளைப் பயன்படுத்தலாம்.


உணவுகளை பொட்டலமிட விரும்புவோர்  சொந்த கொள்கலன்களையும், பானங்களை மீண்டும் நிரப்ப புட்டிகளையும், உணவு பொட்டலங்களை வீட்டுக்கு கொண்டுச்செல்ல துணிப் பைகளையும் கொண்டுவரும்படி பி.ப.சங்கம் ஆலோசனை தெரிவிக்க விரும்புகிறது.


நாம் உணவு வீணாவதையும் குறைக்க வேண்டும்.


உணவு பரிமாறுபவர்கள், பரிமாறும் அளவைக் குறைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


பந்தல்கள் பரிமாறும் அளவைக் குறைத்து, ஒரு நபருக்கு ஒரு பொட்டலம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.


ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள் மற்றும் பொருட்களிலிருந்து நம்மை விடுவிப்பதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு தளமாக இந்தப் பண்டிகையைப் பயன்படுத்துவோம்.


நமது பிள்ளைகளுக்காக தூய்மையான மற்றும் பாதுகாப்பான பூமியை நாம் விட்டுச்செல்ல வேண்டும் என்றார் சுப்பாராவ்.


என். வி. சுப்பாராவ்

பயனீட்டாளர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதிகாரி

பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News