Alaioli
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங்  மார்ச் 3.   மலாயா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தபோது, நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சி காலத்தில் கேரித் தீவில் குடியேறிய இந்தியர்கள் கேரித் தீவின் வளப்பத்திற்கும் செழுமைக்கும் தங்களது கடுமையான உழைப்பைக் கொடுத்து வளம் நிறைந்த பொன் விளையும் பூமியாக மாற்றி யமைத்தனர்.


ஆங்கிலேயர்கள் மேற்பார்வையில் கேரித் தீவில் எத்தனையோ பல தோட்டங்கள் உருமாற்றம் பெற்று, இந்தியர்களின் விடாத கடுமையான உழைப்பால் ஆங்காங்கே தமிழ்ப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் என அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தத் தருணத்தில் ம இகா கட்சியில் அவர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.


இந்தியர்கள் அந்தக் கட்சியில் காட்டிய விசுவாசத்தின் காரணமாக, இதே கேரித் தீவில் அவர்களில் சிலர் ஒன்று கூடி உருவாக்கிய கிராமத்திற்கு மாணிக்க வாசகம் இந்தியர் கிராமம் என்று பெயர் சூட்டிய ம இகா தானைத் தலைவர்  அமரர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலுவின் நல்லாசியுடன் குடியேறினர் . அவர்களின் வாரிசுகள் பல தலைமுறைகளாக இன்றளவும் இங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.  கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளராக தாம் பதவியேற்று, மக்கள் பணிக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்த வேளையில், இங்கே 99 சதவீதம் இந்தியர்களே வாழ்ந்து வரும், மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு உரிய அங்கீகாரமும் அதே வேளையில், மாவட்ட நில இலாகாவின் கிராம அந்தஸ்தையும் பெறுவதற்கான நிரந்தரப் பதிவும் கிடைக்க வேண்டி இன்று காலையில், மாவட்ட ஆட்சியர் புவான் தெங்கு ரோஹானா தெங்கு நவாவி தலைமையில் மாவட்ட நில இலாகாவில் நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விளக்கமும் அளித்து அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான கோரிக்கையை தாம் முன் வைத்ததாக ஹரிதாஸ் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இதன் மூலம், கேரித் தீவு வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்திய பாட்டாளிகளின் இன்றைய தலைமுறையினர் தற்போது வாழ்ந்து வரும் மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு ஒரு அடையாளத்தைத் தேடி த் தரும் பணியில் தாம் களம் இறங்கியிருப்பதாக அவர் கூறினார். மாணிக்கவாசகம் இந்தியர் கிராமம், அதற்கான கிராம அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சியில் மாவட்ட நில இலாகா நில பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டி தாம் இன்றைய கலந்தாய்வு நிகழ்ச்சியின்போது தமது கருத்தை முன் வைத்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியதாக ஹரிதாஸ் அலை ஒளியிடம் கூறினார்.


தமது விளக்கத்தை செவிமடுத்த மாவட்ட ஆட்சியர், மாணிக்கவாசகம் இந்தியர் கிராமத்தின் நிலப் பதிவைப் பெறுவதற்கும் அதன் அடையாளம் மாறாமல் இருப்பதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து செயல்படுத்த விருப்பதற்கான வேலைகளில் விரைவில் கவனம் செலுத்த விருப்பதாக ஒப்புதல் அளித்துள்ள தகவல் குறித்து ஹரிதாஸ் விவரித்தார். மடானி அரசின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமும் இது குறித்து தாம் ஏற்கனவே விவாதித்ததாக அவர் கூறினார்.

Leave a Comment
Trending News