Alaioli
துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறை ஏற்பாட்டில் தமிழ்க்கல்வியில் செய்யறிவும் விளையாட்டு மயமாக்கலும் பயிலரங்கம்

இன்றைய உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பப் புரட்சியாக செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருகின்றது. ஆசிரியர் துறையில்  வியத்தகு மாற்றங்களை பெற்று வரும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டினப் பயிற்சி ஆசிரியர்களிடையே உய்த்துணரும் நோக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறை ஏற்பாட்டில் தமிழ்க்கல்வியில் செய்யறிவும் விளையாட்டு மயமாக்கலும் பயிலரங்கம் விரிவுரைஞர் திரு. குணசேகரன் குப்புசாமி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கமானது காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை கெர்பி மண்டபத்தில் நடைபெற்றது.


இப்பயிலரங்கில் சிறப்பு முகாமையர்களும் பயிற்றுநர்களுமான மலேசிய மொழிப்பிரிவு, பயன்பாட்டு மொழியியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர் இளந்தமிழ் மருதை அவர்களும் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி, மொழி அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர் திரு முகிலன் முருகன் அவர்களும் கலந்து கொண்டனர். 


இப்பயிலரங்கை ஆசிரியர் கல்விக் கழகம், துவான்கு பைனூன் வளாக இயக்குநர் முனைவர் மரியா பிந்தி இப்ராஹிம் அவர்கள் திறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தாம் கூடிய விரைவில் பணி ஓய்வு பெறப் போகும் காரணத்தினால் இப்பயிலரங்குத் தமக்கான இறுதி நிகழ்ச்சியாகும் என அவர் தமதுரையில் உருக்கமாகத் தெரிவித்தார். 

மேலும், செயற்கை நுண்ணறிவில் பயிற்சி ஆசிரியர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனவும், எதிர்கால ஆசிரியர்கள் இத்துறையில் முன்னேற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். பணி ஓய்வு பெறவிருக்கும் அவருக்கு, நிகழ்ச்சியின்போது அனைவரும் மனமார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய கல்வித் துறையைச் சேர்ந்த அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய கூறாக விளங்குகின்றது. குறிப்பாக, பயிற்சி ஆசிரியர்கள் தங்களது தொழில்முறைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இன்றைய கல்வி சூழலில் மிக அதிகமாக உள்ளதால் இத்தகைய பயிலரங்குகள் அவசியமாகத் திகழ்கின்றது என்று தமிழாய்வியல் துறை துணைத் தலைவர் முனைவர் துளசி ருத்திராபதி தமதுரையில் தெரிவித்தார். 


கல்வித் துறையில் நுட்பம் சார்ந்த புரிதலை ஊக்குவிக்கும் நோக்கில், இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் பல பயிற்சிகள், கருத்தரங்குகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


பயிலரங்கத்தின் முதல் அமர்வில், முனைவர் இளந்தமிழ் மருதை அவர்கள் Cloud AI-யைப் பயன்படுத்தி மென்பொருள் உருவாக்கம் எவ்வாறு விரைவாகவும் திறமையாகவும் செய்யலாம் என்பதை ஆசிரியர்களுக்குப் பயிற்சியாக வழங்கினார்; இதில், GitHub இணையதளத்தில் இருந்து நிரல்களைப் பதிவிறக்கம் செய்வது, Command Prompt வழியாக இயக்குவது, HTML மென்பொருளை Cloud AI உதவியுடன் 10 நிமிடங்களில் உருவாக்குவது உள்ளிட்ட செயல்முறைகள் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டன.




பயிலரங்கத்தின் இரண்டாம் அமர்வில் திரு முகிலன் முருகன் அவர்கள் தொழில்நுட்பத் தொழில்முனைவோர் திரு. முகிலன் முருகன் அவர்கள் தாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி விளையாட்டுகளைப்  பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் உருவாக்கிய இந்த மொழி விளையாட்டுகள், மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவையாகும் என்றும் இதில் குறிப்பாக, தமிழ், மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வார்த்தைகளை அடையாளம் காணும் விளையாட்டுகள், புதிர்கள், வினாடி வினா, போன்ற பல விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 

வளர்ந்து வரும் இளைய தலைமுறையின் அறிவாற்றல், செயல் திறன் போன்று, செயற்கை நுண்ணறிவும் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வரும் இந்நேரத்தில், ஆசிரியர்களும் தங்களது நவீன திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விரிவுரையாளர் திரு குணசேகரன் குப்புசாமி அவர்கள் தமது நன்றிதனைத் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News