Alaioli
மீட்சிக்கான பயணம், எந்த கட்சியுடனும் கூட்டணிக்குத் தயாராக மஇகா – ச. விக்னேஸ்வரன் உறுதி.

மலேசிய இந்தியக் காங்கிரஸின் (மஇகா) எதிர்கால அரசியல் பயணத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாகவும், இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கத்துடனும், எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார் நிலையில் உள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


பேராக் மாநிலப் பேரவையின் 79-ஆவது பேராளர் மாநாட்டை சுங்கை சிப்புட்டில் உள்ள துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் திறந்து வைத்துப் பேசுகையிலே, அவர் மேற்கண்ட முக்கிய உரையை ஆற்றினார்.

ஒரு தலைவராக நான் கட்சியின் நலனையே முதன்மையாகக் கருதுகிறேன். அதனால், எதிர்காலத்துக்கேற்ப மஇகாவின் கதவுகள் அனைவருக்கும் திறந்தவையாக உள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை என்றாலும், எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.

தொய்வு நிலை மாற்றம், பீடு நடை நோக்கம் மஇகா தற்போது எதிர்கொண்டும் நிலைத்திருக்கும் தொய்வு சூழ்நிலையை மாற்றி அமைக்க கட்சி முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும், மீண்டெழுச்சிக்கான எந்தவொரு முன்னெடுப்புக்கும் துணிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


நாங்கள் எவரையும் குற்றம் சாட்டவில்லை. அரசியலில் போராட்ட சூழ்நிலை எங்கும் உள்ளது. நாங்கள் வெளிப்படையாக எதையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். எங்களின் மீட்சிக்கான வழியில்தான் இப்போது பயணிக்கிறோம் என்றார் அவர்.

மஇகா – ஒற்றுமை அரசாங்க உறவுகள் ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவிற்கு கேபினட் பதவியோ வேறு பொறுப்புகளோ வழங்கப்படாத போதிலும், பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு கட்சி தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.


பேராக் சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்  குறித்து பதிலளித்த தலைவர், மஇகா ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என வல்லடிப் போக்கில் கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாக, அவரது கட்சியின் பிற்போக்கு எண்ணமும் சந்தர்ப்பவாதமும் இதில் வெளிப்படுகிறது என விக்னேஸ்வரன் குற்றம்சாட்டினார்.

மஇகா தனது புது பாதையைத் தேடி, திறந்த மனப்பாங்குடன் அரசியல் அணிகளை அணுக தயாராக உள்ளது. ஆனால், இந்திய சமுதாயத்தின் நலனே அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வழிகாட்டியாக இருக்கும் என விக்னேஸ்வரன் உறுதியாகக் கூறினார்.

Leave a Comment
Trending News