Alaioli
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் நற்பண்பு வளர்ச்சிக்கு உலகப் பொதுமறை திருக்குறளை தனிப் பாடமாக பயிற்றுவிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் இனமொழி பற்றாளருமான திரு.கணேசன்ன் கோரிக்கை விடுத்தார்.


மேலும்,சமீப காலமாக பள்ளிகளில்  பகடிவதை  பாலியில் வன்கொடுமைகள் , மற்றும் கொலைகள் போன்ற வன்முறை செய்திகள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்கால சமூக நல்லிணகதிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.


அதுமட்டுமின்றி, கல்வி என்பது வெறும்  கற்றல் திறனை மட்டுமே வழங்கும் ஒரு கருவி அல்ல எனவும் நினைவுறுத்திய அவர் அது நற்பண்புகள், ஒழுக்கம், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களின் மனதில் விதைக்கும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறை என்றார்.


தமிழ்ச் சமூகத்துக்கு  வழிகாட்டியாகவும் ஒழுக்க நெறிமுறைகளை, பண்பாட்டுக் கொள்கைகளை எடுத்துரைக்கும் திருக்குறளை ஒரு தனிப்பாடமாக கற்பிக்க  வேண்டும். மனிதன் மனிதனாக வாழ நாடு, மொழி, இனம், மதம் கடந்து உயரிய பண்புகளைக் கற்றுக்கொடுப்பதில் திருக்குறளுக்கு நிகரான படைப்பு உலகில் இல்லை. அறம், அன்பு, நட்பு, கல்வி, அரசியல், விடாமுயற்சி போன்ற கருத்துக்களைக் உள்ளடக்கிய திருக்குறளை 

நாள்தோறும் ஒரு பாடமாக பயிற்றுவிக்க வழிவகை செய்தால், மாணவர்கள் பண்புள்ளவர்களாகவும் நேர்மையாளர்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாகவும் உருவாகுவார்கள் என்று தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.


மேலும், திருக்குறளை மனப்பாட பகுதியாக குறுகிய அளவில் இல்லாமல் உரிய விளக்கங்களுடன் விரிவாக முறையான கற்பித்தலோடு பயிற்றுவித்தல் மூலம் தார்மீகப் பண்புகளைக் கொண்ட சமூகத்தை நாம் உறுதியாக உருவாக்கலாம் என்றும் கூறினார்.


மாணவர்களுக்கு திருக்குறளை பயிற்றுவிக்க கல்வி அமைச்சு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இதன் தொடர்பாக கல்வி அமைச்சிடம் விரைவில் அதிகாரபூர்வ கடிதம் கொடுக்கவும் தாம் ஆவணம் செய்வதாகவும் கணேசன் மேலும் கூறினார்.

Leave a Comment
Trending News