Alaioli
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா

தீபங்களின் ஒளி பரவிய சூழலில், பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகதில்  மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி கொண்டாட்டத்தாலும், கருணை உதவி பொருட்கள் வழங்கும் மனிதநேய நிகழ்ச்சியாலும் ஒளிர்ந்தது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. சௌந்தரராஜன் த/பெ மாரி  தீபாவளி என்பது ஒளி மட்டுமல்ல இதயங்களில் கருணையும் அன்பும் மலரச் செய்யும் நாள் எனக் கூறி, அனைவரின் உள்ளங்களிலும் மனிதநேயத்தின் ஒளியைப் பரப்பினார்.

மேலும், விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பத்து கவான் காவல் நிலையத்தின் துணைத் தலைவர்  சார்ஜெண்ட் மேஜர் கோபாலகிருஷ்ணன் த/பெ இராமகிருஷ்ணன், சார்ஜெண்ட் தெங்கு அஸ்லி பின் தெங்கு அசிஸ், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி திருமதி ஜெயபாரதி த/பெ முனியாண்டி ஆகியோரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மாணவர்கள் பரதநாட்டியம், ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளால் மேடையை வண்ணமயமாக்கி ஒளிரச் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவரின் மனமும் மகிழ்ச்சி, இசை, உற்சாகம் ஆகியவற்றால் நிரம்பியிருந்தது.


நிகழ்ச்சியின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பி40 பிரிவைச் சேர்ந்த 16 ஏழை குடும்பங்களுக்கும் ரொக்க அன்பளிப்பு   வழங்கப்பட்டதுடன், அருமையான உணவுகளும் பரிமாறப்பட்டன. அவ்வகையில் அந்தக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்களும் வழங்கப்பட்டு மனிதநேயத்தின் மணம் பரவச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற வழிவகுத்த ஐயா திரு. சௌந்தரராஜன் த/பெ மாரி  அவர்களுக்கும், ஆதரவளித்த மலேசிய ‘சிடிஷஸ் பைஸ் மார்க்கெட்டிங்’ (Citi Sweets Spice Marketing) தனியார் நிறுவனத்திற்கும், பள்ளி நிர்வாகத்தும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தீபங்களின் ஒளியைப் போல அன்பும் ஒற்றுமையும் பரவிய இவ்விழா, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் மறக்க முடியாத இனிய நினைவாகப் பதிந்தது.

Leave a Comment
Trending News