Alaioli
நீர்நிலைகளைச் சுத்தம் செய்யும் எந்திரம் – மலாயாப் பல்கலைக்கழக விரிவுரைஞரின் அரியதொரு கண்டுபிடிப்பு

மீன் குளங்களைத் தூய்மையாக பராமரிக்கும் நோக்கத்தில் புதுமையான எந்திரம் ஒன்றனை வடிவமைத்து அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார் மலாயாப் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் அர்ச்சனா புதியப்பன். 


இவர் கெடா செர்டாங் கணேசர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.


இன்றைய நவீனயுகத்தில் மீன்வளத் துறையில் நீர்மாசுபாடு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையினைத் தவிர்ப்பதற்குக் குளங்களைச்  சுத்தப்படுத்தும் திறனுடன் இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும்  இக்கண்டுபிடிப்பிற்குப் பயன்படுத்திய அனைத்து பொருள்களும் நிலைத்தன்மை கொண்ட, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்கள் என்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என முனைவர் அர்ச்சனா மேலும் தெரிவித்துள்ளார். 


ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்காக Program Komuniti@UniMADANI திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நிதி அமைச்சகத்திடமிருந்து சுமார் 2 லட்சம் ரிங்கிட் சமூக அடிப்படையிலான மானியமாக பெற்றதாக முனைவர் அர்ச்சனா தெரிவித்தார். மேலும், வழக்கமான ஆய்வுகள் அல்லாமல் சமூகத்திற்குப் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளாக தமது ஆராய்ச்சி அமையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். 


பொதுவாக நீச்சல் குளங்களைச்  சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தானியங்கி எந்திரங்களைப் பார்த்தப்பிறகுதான் இந்த ஆராய்ச்சிக்கான சிந்தனை உதித்ததாக அவர் விளக்கினார். “நீச்சல் குளங்களில் மீன்கள் இல்லை, மணல் இல்லை. ஆனால் மீன் குளங்களில் இவை அனைத்தும் உள்ளன. அதனால் அந்த சவால்களை சமாளிக்கக்கூடிய எந்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என முனைவர் அர்ச்சனா குறிப்பிட்டார்.


சுமார் ஏழு மாத கால ஆராய்ச்சிக்குப் பிறகு, ஏழு கிலோ எடைக் கொண்ட இந்த எந்திரம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் மூன்று விதமான எந்திரங்களை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முதல் எந்திரம் குளத்தின் மேற்பரப்பில் மிதக்கும் இலைகள், தூசுகள், இறந்த மீன்கள் போன்றவற்றை சேகரிக்கும். இரண்டாவது எந்திரம் நீரின் தரத்தை பரிசோதித்து சுத்தம் செய்யும். மூன்றாவது எந்திரம் முழுமையாக தானியக்க முறையில் GPS வழிநடத்தலுடன் செயல்படும். முதல் இரண்டு எந்திரங்களை கையால் கட்டுப்படுத்த முடியும், மூன்றாவது எந்திரம் தானியங்கி முறையில் இயங்கும்.


மீன்வளத் துறையில் தொழிலாளர்களின் வேலையை எளிதாக்கும் இத்தகைய தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் குறிப்பாக பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்குவதே எங்கள் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். பல சோதனைகள் நிறைவடைந்த பிறகு இந்த எந்திரங்களை வருங்காலத்தில் வணிக ரீதியில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக முனைவர் அர்ச்சனா கூறினார். இந்த ஆராய்ச்சியின் அதிகாரப்பூர்வ வெளியீடு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பஹாங் மாநிலத்தின் குவாந்தானில் நடைபெற உள்ளது.

Leave a Comment
Trending News