Alaioli
வாழ் நாள் சேவைக்கு பாராட்டு: டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் DSPN எனும் டத்தோ விருது பெற்றார்.

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 5 – செ. குணாளன்


மருத்துவம் என்பது ஒரு தொழிலாக அல்ல,  அது ஒரு புனித சேவையாகவே இருந்தது எனக் கூறுகிறார்கள் 58 வயதான டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன். 


பரிவும், கருணையும் மிக்க தனது பயணத்துக்காக, இவர் அண்மையில் டார்ஜா செத்தியா பங்குவான் நெகிரி (Darjah Setia Pangkuan Negeri – DSPN) என்ற மாநில உயர் விருதைப் பெற்றார். இந்த விருது பினாங்கு மாநில ஆளுநரின் 84வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 28ஆம் நாள் , டேவான் ஸ்ரீ பினாங்கில்  நடைபெற்ற மாநில பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.


இந்தியாவில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவக் கல்வியை (MBBS) முடித்தார். பின்னர் மலேசியாவுக்கு வந்ததும், தனது மருத்துவப் பணியை முழு நம்பிக்கையுடனும், தொண்டுமிக்க எண்ணத்துடனும் தொடர்ந்தார். அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி, மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றார்.

அதன்பின், தனியார் மருத்துவத்துறையில் தொடர்ந்த தனது பயணத்தில், ஹைலண்ட் மருத்துவமனையில் 10 ஆண்டுகள் மருத்துவ மேலாளராகவும், பின்னர் லோ குவான் லே சிறப்பு மருத்துவமனையில் 14 ஆண்டுகள் சேவை செய்துள்ளார்.


25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மருத்துவ அனுபவத்துக்குப் பிறகும் தொடர்ந்து மருத்துவ சேவையிலும் தனது சமூகப் பணி குறித்த அர்ப்பணிப்பு சேவையை குறையில்லாமல் நடத்தி வருகுறார். அண்மையில் முதியோர்  பராமரிப்பு மற்றும் குடும்ப மருத்துவத்தில் டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்துள்ளார், இதுவும் அவரது தொடரும் கற்றல் ஆர்வத்தைக் காட்டுகிறது.

அவரை தனித்துவமாக காட்டுவது, அவரது மௌனமான ஆனால் ஆழமான தொண்டு பணிகளே.

\"நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன் என அவர் எளிமையாக கூறுகிறார்.

1998 ஆம் ஆண்டு முதல் மஹிந்தராம பௌத்த ஆலயத்தின் அமாதா கிளினிக்கில், பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கத் தொடங்கினார்.

2005 ஆம் ஆண்டில், \"மிட்டா ஃபார் லைஃப்\" என்ற அமைப்பை நிறுவினார் – இது நீண்டநாள் நோயாளர்களுக்கு, குறிப்பாக புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் செயல்படுகிறது.

அவரது வழிகாட்டலில், மிட்டா ஃபார் லைஃப் அமைப்பு ஒரு நம்பிக்கையின் ஒளியாக உருவெடுத்துள்ளது. நிதி திரட்டல் இயக்கங்கள், ஆலோசனை வழங்கல், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாதந்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் மருத்துவ முகாம்கள் போன்ற பல சேவைகள் நடத்தி வருகின்றனர்.

மேலும், சிவசாந்த கிளினிக்கிலும் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக தொண்டுப் பணியாற்றி வருகிறார். இராமகிருஷ்ண ஆசிரமத்தில் மகளிர் குழுவின் செயலில் இணைந்து செயல்படுகிறார். தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதாரப் பயிற்சிகளிலும் அவர் பங்கெடுக்கிறார்.


தன்னலமற்ற சேவையை விரிவுபடுத்தும் விதமாக, பினாங்கு மைன்ட்ஸ் (MINDS) அமைப்பின் கிளையுடன் இணைந்து ஆட்டிசம் மற்றும் செரிப்ரல் பால்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு அளிக்கிறார். \"லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் த பூர்\" எனும் முதியோர்   இல்லத்திற்கும் தொடர்ந்த ஆதரவை வழங்குகிறார்.

மருத்துவர், வழிகாட்டி, தன்னார்வலர், நண்பர் என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், டாக்டர் ஜெயஸ்ரீ எப்போதும் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டார். மற்றவர்களின் வாழ்க்கையை மரியாதையுடன், கருணையுடன் உயர்த்துதல்.

இப்போது பெற்றுள்ள DSPN விருது, ஒரு வாழ்நாள் சேவையின் அங்கீகாரமாகும். ஆனாலும் டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசனுக்காக அந்த பயணம் இன்னும் நிறைவடையவில்லை, அது தொடரும், இன்னும் பலருக்கு நம்பிக்கையையும் நலத்தையும் பறைசாற்றும் பயணமாக தொடர்குறது. மிகச் சிறந்த மருத்துவர், மக்கள் சேவையாளர்,  இலக்கியப் சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டு,  டத்தோ விருதும் பெற்ற டாக்டர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு அலை ஒளி தமிழ் ஊடகம் வாழ்த்துடன் நன்றிப்பாராட்டுகிறது.

Leave a Comment
Trending News