Alaioli
திருச்சி, புனித சிலுவை கல்லூரியில்  - மலேசிய  இலக்கியம் அறிமுகம்!

102 ஆண்டுகள்  பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 6.8.2025ஆம் தேதி நடைபெற்ற \"இந்தியச் சிந்தனையில் செவ்வியல் இலக்கியங்கள்\" தலைப்பில் நடந்த கருத்தரங்கின் சிறப்பு அங்கமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து  இடும் நிகழ்வு நடந்தது.


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிகராளியாக அதன் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ஜோதி இராஜகுமாரி ஆகியோர்  கையெழுத்திட்டனர்.


இரு வழி கல்வி இலக்கிய பரிமாற்ற திட்டங்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். குறிப்பாக மலேசிய இலக்கியம் குறித்தும் இலக்கியவாதிகள் பற்றியும்  கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கும் மலேசியப் படைப்புகளை பாடநூல் ஆக்குவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை புரியும்.


 ஏற்கனவே சில கல்லூரிகளில் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அங்கு மலேசிய இலக்கியம் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


\"இந்திய சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்\"  எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 52 கட்டுரைகள் படைக்கப்பட்டன. அந்த கட்டுரைகள் நூலாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


கல்லூரி முதல்வர் முனைவர் இராஜகுமாரி நூலை  வெளியிட மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ. இராஜேந்திரன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.


இந்தக் கருத்தரங்கிற்காக மலேசியாவை சார்ந்த மன்னர் மன்னன் மருதை, ஈஸ்வரி குணசேகரன் ஆகியோர் படைத்தளித்த கட்டுரைகளும்  நூலில் இடம் பெற்றிருக்கிறது.

Leave a Comment
Trending News