Alaioli
ஜெயம் கழகத்தின் ஓட்டப்பந்தயப் போட்டி விழா

மலேசிய ஜெயம் ஓட்டப்பந்தயக் கழகத்தின் ஏற்பாட்டில்  கம்பார் ராக்கான் மூடா அரங்கத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். கம்பார், தஞ்சோங் ரம்புத்தான், ஈப்போ, போர்ட்டிக்சன், தைப்பிங் ஆகிய ஊர்களில் இயங்கி வரும் ஜெயம் ஓட்டப்பந்தயக் குழுவினர் கலந்து கொண்ட இப்போட்டி விளையாட்டில் 8 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் வரை இதில் பங்கெடுத்தனர். 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டத்துடன் பேட்டன் மாற்றி ஓட்டமும் இடம்பெற்றது.


இப்போட்டி விளையாட்டினை மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவாணி வீரையா நிறைவு செய்து உரையாற்றி வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து நற்சான்றிதழ் வழங்கினார். 


அவர் தமது உரையில் இப்போட்டி விளையாட்டினை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய ஜெயம் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார். ஓட்டப்போட்டிகளிலும் விளையாட்டுத் துறையிலும் இந்தியர்கள் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. அக்காலம் மீண்டும் மலருகிறது என்ற நம்பிக்கையும் மகி ழ்ச்சியும் தனக்கு ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். 

வாய்ப்பைத் தேடி காத்திருக்கும் நமது மாணவர்களுக்கு ஜெயம் குழு ஒரு வழிகாட்டியாய் இருந்து வழிநடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  விளையாட்டுத் துறையிலும் ஓட்டப்போட்டியிலும் பல மாணவர்களை உருவாக்கி வரும் ஜெயம் குழுவினருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் ஆதரவினையும் வழங்குவதாக  உறுதியளித்தார். 


முன்னதாக ஜெயம் ஓட்டப்பந்தயக் கழகத்தின் தலைவரும் தோற்றுனரும்  இப்போட்டி விளையாட்டின் ஏற்பாட்டாளருமான முன்னாள் பெருநடை வீரர்  குருசாமி சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். கடந்த 40 ஆண்டுகளாக தாம் இந்த ஓட்டப்பந்தயத் துறையில் ஈடுபட்டு பல வெளிநாட்டு போட்டிகளில்  கலந்து வெற்றியும் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.  இத்தனை ஆண்டுகளில் தாம் பெற்ற அனுபவங்கள், திறமைகள் வீண்போய்விடக்கூடாது  என்பதற்காக இக்கழகத்தை தோற்றுவித்து பயிற்சிக்குழுக்களை உருவாக்கியுள்ளதாக கூறினார்.  


கடந்த ஐந்து ஆண்டுகளில் 

பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் ஆங்காங்கே திறமையான பயிற்றுனர்களை அடையாளங் கண்டு இதுபோன்ற குழுக்களை உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட குருசாமி ஜெயம் குழுவில் பயிற்சி எடுத்துவரும் மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய ரீதியில் பல வெற்றிகளை குவித்து வருகின்றனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இன்று அவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இப்போட்டி விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகக் கூறிய அவர் வெகுதூரத்திலிருந்து ஆர்வமாக வந்து கலந்து கொண்டுள்ள  அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுனர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அனைவருக்கும் மிகச் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருப்பதாக தெரிவித்தார்.


ஜெயம் குழுவினர் ஆர்வமுள்ள இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிகள், மலாய்ப்பள்ளிகள் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை இலாகா, சுகாதாரத்துறை இலாகா போன்ற அரசு நிறுவன ஊழியர்களுக்கும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். 


ஜெயம் குழுவினருக்கு எல்லா வகையிலும் ஆதரவு வழங்கி நிதி உதவியும் செய்துள்ள மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையாவுக்கும் தனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அவரின் ஆதரவும் ஒத்துழைப்பும்   மேலும் ஊக்கம் ஊட்டுவதாக உள்ளது எனத் தெரிவித்தார்.


இதயக்கனி சமூக நல இயக்கத் தலைவர் சிவசங்கர் நாராயணன், கம்பார் தமிழர் சமூக முன்னேற்றக் கழகம், பஞ்சா பூஜை பொருட்கள் நிறுவனம், ஈப்போ கோபி பிரிண்டர்ஸ் மற்றும் மாணவர்களை வெகுதூரத்திலிருந்து அழைத்துவந்த பயிற்றுனர்கள், பெற்றோர்கள், போட்டி விளையாட்டினை சிறப்பாக நடத்திக் கொடுத்த அதிகாரிகள், மருத்துவ உதவி வழங்கிய சண்ட் ஜோன் அம்புலன்ஸ் கழகத்தின் ஏ.சி.எஸ் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்,

 தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு உதவி செய்துள்ள நல்லுள்ளங்கள் ஆகியோருக்கும்   இவ்வேளையில் தமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பெருநடை. வீரர் குருசாமி சுப்பிரமணியம்.


காலை எட்டு மணிக்குத் தொடங்கிய இப்போட்டி விளையாட்டு மாலை மணி  5.00 க்கு இனிதே நிறைவுற்ற வேளையில் கழுத்து நிறைய பதக்கங்களையும் நெஞ்சம் முழுக்க  நம்பிக்கையையும் முகம் முழுக்க   மகிழ்ச்சியையும் கைகள் நிறைய உற்சாகத்தையும் அள்ளிச் செல்லும் மாணவர்களை காணும் போது விளையாட்டுத் துறையில் இந்தியர்கள் மீண்டும் கோலோச்சும் நம்பிக்கை ஒளி பிறக்கின்றது.

Leave a Comment
Trending News