Alaioli
பட்டர்வொர்த் மாக் மண்டின் அருள்மிகு ஶ்ரீ முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா

மாக் மண்டின் அருள்மிகு ஶ்ரீ முருகன் கோவில் பரிபாலன அவையில், ஆலய சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


ஆன்மிகச் செழுமையுடன் நடைபெற்ற இவ்விழாவில், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ஆலய வளாகத்தில் திரண்டனர். 


ஆலய தலைவர் பி. உதயகுமார் தலைமையில், நிர்வாகக் குழுவினர், ஆலய தொண்டர்கள், இளைஞர்-மகளிர் பிரிவினர் ஆகியோரின் ஒத்துழைப்பில் விழா மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.

விழா அதிகாலை 5.40 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாகவஜம், ஆறாம் கால பூஜை, சிறப்பு யாகங்கள் மற்றும் தேவதைகள் கடம் புறப்பாட்டுடன் தொடங்கியது. காலை 10.15 மணிக்கு சந்தர் விமான ஸ்தூபி, பரிபார விமான கோபுரம் மற்றும் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. 


மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.குடமுழுக்கு விழாவை தலைநகரிலிருந்து வந்த சவ. ஶ்ரீ க.பா. பிரகதீஸ்வரன் குருக்கள் தலைமையேற்று நடத்தினார். ஆலய குருக்கள் சிவ ஶ்ரீ யாகேஸ்வரன் குருக்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். 


ஆலய திருப்பணியின் ஸ்தாபதியாக ஆர். சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.

இந்த விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களில் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சி. யே கின், செனட்டர் ஆர். லிங்கேஸ்வரன், பினாங்கு இந்திய வர்த்தகர் தொழிலாளர் சங்கத் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன், உதவி தலைவர் டத்தோ மரியதாஸ் கோபால், மக்கள் கட்சித் தலைவர் ஆர். தரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஆலய குடமுழுக்கு விழா சிறப்பாக அமைய பங்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டதாக, ஆலய தலைவர் பி. உதயகுமார் அலை ஒளியிடம்  தெரிவித்தார்.

Leave a Comment
Trending News