நாடறிந்த எழுத்தாளரும் மேனாள் இடைநிலைப்பள்ளி ஆசிரியருமான திரு.ந.பச்சைபாலன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் ஒரு சந்திப்பின்போது இந்நாட்டில் படைப்பிலக்கியம் முன்பைக் காட்டிலும் மேலும் முன்னகர்ந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். எஸ்.பி.எம் தமிழிலக்கியப் பாட வளர்ச்சிக்குத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்த அவர் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கியத் திறன் மேம்பாட்டிற்காகப் பல நூல்கள் எழுதியுள்ளார்.
சிறுகதை பகுதியைப் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு இலக்கியம் சார்ந்த தனித்திறன் அவசியம் என்றும் வாசிப்பின்வழி அத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கல்விமுறையிலும் கலைத்திட்டங்களிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் சிறுகதையைப் போதிப்பதும் அதனை மதிப்பிடுவதும் கூடுதல் சவாலான பகுதியாக மாறி வருவதைச் சுட்டிக் காட்டிய அவர் ஆசிரியர்கள் இலக்கிய வாசிப்பையும் சிறுவர் சிறுகதை தொடர்பான ஆய்வுகளை வாசிப்பதையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்ப்பள்ளிகளில் சிறுவர் சிறுகதை போதிப்பதில் ஆசிரியர்களுக்கு முறையான ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்றிகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆசிரியர்களை வலியுறுத்தினார்.
அவரவர் அனுபவநிலைக்கு ஏற்பதான் சிறுகதை பள்ளிகளில் போதிக்கப்பட்டு வருவது பின்னாளில் சிறுகதை எழுதும் திறனை வளர்ப்பதில் தொய்வை உண்டாக்கலாம். ஆசிரியர்களும் வேலை பளுவின் காரணமாக சிறுவர் சிறுகதை போதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறுவர் சிறுகதை தன்மைகளை உள்ளடக்கிய கற்பித்தல் பயிற்றி சிறுவர் இலக்கியம் சார்ந்தும் பயிற்றியல் சார்ந்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதைத் தம்மால் உணர முடிவதாகத் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் சிறுவர் சிறுகதைப் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்குப் போதுமான கற்பித்தல் ஆவணங்கள் இல்லாததும் குறையாகவே இருக்கின்றன. இவை இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று இலக்கியம் கற்பித்தலில் பல்லாண்டு காலம் அனுபவமுள்ள எழுத்தாளரும் மேனாள் ஆசிரியருமான திரு.ந.பச்சைபாலன் அவர்கள் அலையொலியிடம் தெரிவித்தார்.