Alaioli
செங்காங் தொழிற்பேட்டையில் ரப்பர் தொழிற்சாலை தீ விபத்து- இறுதி கட்ட அணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோகி கருணாநிதி

கூலாய், பிப்.25-செங்காங் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை ஜொகூர் மாநில அரசு மிகக் கவனத்துடன் எடுத்துக் கொண்டு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாக ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.


இந்த தொழிற்சாலை 18 ஆகஸ்ட் 2021 அன்று அனுமதி பெற்ற உரிமம் கொண்ட தொழிற்சாலையாகவும், தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ளதாகவும், 26 செப்டம்பர் 2018 தேதியிட்ட கட்டிடம் நிறைவு மற்றும் இணக்கம் சான்றிதழ் (CCC) பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, ஜொகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, கூலாய் மாநகராட்சி, கூலாய் மாவட்ட அலுவலகம் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப அமைப்புகள் இணைந்து தீ அணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அவர் கூறினார்.


தற்போது எரிந்து கொண்டிருக்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் எஞ்சிய பகுதிகளை முழுமையாக அணைப்பதே முதன்மை கவனமாக இருந்து வருவதாகவும், இதற்காக நுரை (ஃபோம்) பயன்படுத்திய நேரடி தாக்குதல் முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கூலாய்  நகரண்மை கழகம் மூலம் 2 பாக்ஹோ மற்றும் 2 எக்ஸ்கவேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு, எரிந்த கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட அலுவலகம் கூடுதலாக JCB மற்றும் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களை ஒருங்கிணைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.


முன்னதாக ஃபோம் பற்றாக்குறை காரணமாக சவால்கள் இருந்ததாகவும், எனினும் மெலாக்கா தீயணைப்பு துறையிலிருந்து 25 டிரம் ஃபோம், இன்று புத்ராஜெயா தீயணைப்பு துறையிலிருந்து மேலும் 30 டிரம் ஃபோம் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் தீ அணைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி சுமார் 40 சதவீத பகுதி இன்னும் அணைப்பு நிலையில் இருப்பதாகவும் கூறினார்.


பொது மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுவட்டார சமூகத்தின் நலன் மாநில அரசின் முதன்மை முன்னுரிமை என வலியுறுத்திய டத்தோ ஜஃப்னி, தீ முழுமையாக அணைக்கப்படும் வரை கடுமையான கண்காணிப்பு தொடரும் என்றும், சம்பவத்தின் காரணம் மற்றும் தொழிற்சாலையின் விதிமுறை பின்பற்றல் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.


இந்த நடவடிக்கைகளில் இடைவிடாது பணியாற்றி வரும் தீயணைப்பு துறை, கூலாய் மாநகராட்சி, மாவட்ட அலுவலகம், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும்கூலாய் நகராண்மை கழகப் பணியாளர்களுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு வளையம், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளில் துணை நின்ற காவல் துறைக்கும் சிறப்பு பாராட்டு தெரிவித்தார்.


ஜொகூர் மாநிலத்தின் தொழிற்பேட்டை பாதுகாப்பும் மக்களின் நலனும் உறுதி செய்ய, மீட்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து ஒருங்கிணைந்த முறையில் கடுமையாக மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post Image

Leave a Comment
Trending News