Alaioli
செயற்கை நுண்ணறிவு மூலம் BKJ பெயரில் மோசடி: ஜொகூர் மக்களுக்கு மந்திரி பெசார் எச்சரிக்கை

கோகி கருணாநிதி

ஜொகூர், பிப்.25-ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் அன்பு உதவி திட்டம்  ( BKJ ) தொடர்பாக பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு  (AI) தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் முகம் மற்றும் குரலை நகலெடுத்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12 TikTok கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகவும் கவலைக்கொண்டு வருவதாக ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். 


இது திட்டமிட்ட குற்றச்செயல் எனக் குறிப்பிட்ட அவர், இந்த சிண்டிகேட் ஜொகூர் மாநில தலைமையின் நம்பகத்தன்மையை பாதிப்பதோடு, BKJ என்ற பெயரில் அரசின் லோகோ மற்றும் அடையாளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி, பொதுமக்களின் தொலைபேசி எண், அடையாள அட்டை எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருட முயன்றுள்ளதாக தெரிவித்தார். 


ஜொகூர் மாநில அரசு, மக்களின் நலனை கேலியாக்கும் எந்த முயற்சியையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மலேசிய அரச காவல் துறையினருக்கும், குறிப்பாக வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்கும், மேலும் மலேசிய தொடர்பாடல் மற்றும் பன்மாத்ய ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் தமது பாராட்டுகளை அவர் பதிவு செய்தார். 


ஜொகூர் அன்பு உதவி திட்டம் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் ஜொகூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என வலியுறுத்திய அவர், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்த வேண்டாம் என்றும், எந்த அங்கீகாரமற்ற தரப்பினருக்கும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும், முன் சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார். 


சைபர் குற்றச்செயல்களிலிருந்து ஜொகூர் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் காக்க மாநில அரசு தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்றும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

Post Image

Leave a Comment
Trending News