Alaioli
கீழ்  பேராக் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற “ஸ்கை மனவளக்கலை” யோகா பயிலரங்கம்..!

டிகே.மூர்த்தி,

தெலுக் இந்தான், மார்ச் 7-சிரம்பான் மனவளக்கலை அமைப்பின் மூலம், உலகம் அமைதி அடைய வேண்டும். எல்லா ஊர்களும் போரில்லா ஊர்களாக குடிமக்கள் மகிச்சியுடன் வாழ வேண்டும். உலக மகிழ்ச்சிக்கு ஒரு தனி மனிதரின் மகிழ்ச்சி கீழ்ப் தான் தொடக்கப்புள்ளியாக இருத்தல் முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு அழகான முறையில் அந்த மனிதனை அமைதி நிலைக்கு கொண்டுவரும் பயிற்சினை நேற்று  (06.03.2026) தெலுக் இந்தான் சிதம்பரம்பிள்ளை தமிழ்ப்பள்ளியின் கே.ஆர். சோமா மண்டபத்தில் நடத்தப்பட்டது. 


“மனவளக்கலை” என்பது “அருள்தந்தை” வேதாத்திரி மகரிஷியினால் 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம் என்னவென்றால், மனிதனின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அறிவை முழுமையாக்கி, வாழ்வை வளமாக்கும் ஒரு செயல்முறைப் பயிற்சியாகும். இப்பயிற்சி மூலம் நோயற்ற உடல், வன்முறையற்ற சமூகம், குழப்பமற்ற மனம், தடையற்ற அறிவு, அதிர்ச்சியற்ற நினைவு, துக்கமற்ற ஆன்மா, நடுக்கமற்ற மூச்சு ஆகியவையே இந்த “மனவளக்கலை” நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கமாகும். மேலும், வாழ்க்கை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் ஒரு மனோதத்துவ அறிவியலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் இவ்வமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் (சிரம்பான்) பேராசிரியர் ஆறுமுகம் பாலகிருஷ்ணன் “அலை ஒளி” செய்தியாசிரியரிடம் கூறினார். 


தமிழ்ப்பள்ளி சேர்ந்த சுமார் 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் (UP) அலுவலக தலைமையாளர் நாகலிங்கம் முனுசாமி மற்றும் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவரும், முதுகலைப் பட்டதாரியுமான ஸ்ரீ முருகன் குமரேசன் ஆகியோரால்  முன்னெடுக்கப்பட்டது என்றும் பேராசிரியர் ஆறுமுகம் தெரிவித்தார்.   


உடல், மனம், உயிர் என்ற இந்த மூன்றையும் கருத்தில்கொண்டு அதற்கான பயிற்சிகளை  வடிவமைத்து தந்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. அந்த வகையில் தமிழ் நாட்டிலிருந்து ஏறக்குறைய 70 களில் மகரிஷி மலேசியாவுக்கு வருகை அளித்துள்ளார். அந்நிலையில், பினாங்கு மற்றும் பேரா மாநிலங்களவை சமூகத்திற்கு இந்த “மனவளக்கலை” பயிற்சியை தொடங்கினார். அப்பயிற்சி மூலமாக நிறைய மலேசிய அன்பர்கள் கற்றுவந்தனர். 1995 ஆண்டுகளுக்கு பிறகு மகரிஷி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு  பயணம் செய்ய முடியாத காலக்கட்டத்தில் சற்று சோர்வாக இருந்த நிலையில், மலேசிய அன்பர்கள் சிலர், மகரிஷியோடு தொடர்புகொண்டு சுயமாக தமிழகத்திற்குச் சென்று  மீண்டும் அப்பயிற்சினை புதுப்பித்துக்கொண்ட நிலையில், மீண்டும் அவர்கள் மலேசியாவுக்கு வந்து பயிற்சியைத் தொடக்கம் காணச் செய்தனர். 


கற்பித்தல் பணி மற்றும் பள்ளிச் சூழல் சார்ந்த சவால்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி மிக மிக அவசியமாகவும் பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கீழ்ப் பேரா மாவட்ட தலைமையாசிரியர் கழகம் இக்கலையின் மீது நாட்டம் ஏற்படக் காரணமாக இருந்துள்ளது. நிகழ்வின் போது தமிழ் நாட்டைச் சேர்ந்த  பேராசிரியர் நாராயண மூர்த்தி ஆசிரியர்கள் மத்தியில் மின் பலகையின் மூலம் செயல்முறை குறித்த விளக்கம் அளித்தார். இது பங்கேற்ற ஆசிரியர்களுக்கு  ஊக்குவிப்பாக இருந்தது என்றே மகிழ்ச்சியுடன் கூறலாம்.

Leave a Comment
Trending News