Alaioli
திருவாசகம் பாராயணம் மற்றும் 63 நாயன்மார்கள் மாறுவேடப் போட்டி – கூலாயில் சிறப்பாக நடைபெற்றது

கோகி கருணாநிதி

கூலாய், மார்.7- மலேசிய இந்து சங்கம் கூலாய் வட்டாரப் பேரவை, இந்து சமய மற்றும் சமுதாய மேம்பாட்டு கழகம் கூலாய், மலேசிய கயிலை அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 5வது திருவாசகம் (சிவபுராணம் பாராயணம்) மற்றும் 63 நாயன்மார்கள் மாறுவேடப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்வு கூலாயில் அமைந்துள்ள தேவ அருள்மிகு சிவசக்தி முனியாண்டி ஆலய வளாகத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆன்மிகத் திருவிழாவாக மாற்றினர்.


சிறுவர்களுக்காக நடைபெற்ற 63 நாயன்மார்கள் மாறுவேடப் போட்டியில் சுமார் 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாயன்மார்களின் வேடம் பூண்டு அவர்கள் அளித்த நிகழ்த்தல்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. மேலும் திருவாசகம் (சிவபுராணம் பாராயணம்) போட்டி பிரிவு 1 முதல் பிரிவு 5 வரை நடைபெற்றதில் சுமார் 120 மாணவர்களும் பெரியவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டினர்.


இதில் மிகவும் சிறப்பான பகுதியாக குடும்பங்களுக்கான திருவாசகம் பாடும் போட்டியும் நடைபெற்றது. இதில் சுமார் 5 குடும்பங்கள் கலந்து கொண்டு அப்பா, அம்மா, பிள்ளைகள் என குடும்பமாக இணைந்து சிவபுராணத்தை பாடிய விதம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.


இது போன்ற போட்டிகள் இன்னும் பல இடங்களில் நடைபெற வேண்டும். இதன் மூலம் நம் தமிழ் சமயத்தின் பெருமையையும் புனிதத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது சிவபுராணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கூலாய் வட்டாரப் பேரவை தலைவர் சுபந்திரன் தெரிவித்தார்.


மேலும் கூலாய் ம.இ.கா தொகுதி தலைவர் டத்தோ சிவ சந்திரன் தனது சிறப்புரையில், இவ்வகையான சமய மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு தாம் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார். நம் பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே தங்கள் சமயத்தைப் பற்றி அறிந்து வளர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து சூழல் கிண்ணத்தை வென்ற டெநிஷா சுப்பரமணியம் என்ற மாணவிக்கு டத்தோ சிவ சந்திரன் தனது சார்பாக ரி.ம 500 ஊக்கத்தொகையாக வழங்கினார். அவரின் இந்த செயல் மாணவர்களை மேலும் இத்தகைய போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள ஊக்குவிப்பதாக அமைந்தது.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற பிற மாணவர்களும் ஏமாற்றமடையாமல் அவர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுத் தலைவி ஜெயபாரதி தெரிவித்தார்.


மேலும் குடும்பமாக போட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று என்றும், அடுத்தடுத்த போட்டிகளில் மேலும் பல குடும்பங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஏனெனில் இவ்வாறு குடும்பங்கள் இணைந்து பங்கேற்கும் போது இந்திய சமயத்தின் ஆழமான அர்த்தங்களையும் பாரம்பரியத்தையும் நாம் மேலும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய கயிலை அறக்கட்டளை தலைவர் ராமகிருஷ்ணன், மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதி கருப்பையா, ஆலய தலைவர் கணேசன், கிருஷ்ணன், தமிழ்லானந்த், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News