Alaioli
நோன்பு திறப்பு விழா,  மகளிர் தின விழா ஆகிய விழாக்களின் கொண்டாட்டத்தைத் தன் இல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஜரினா அப்துல்லா.

சத்யா பிரான்சிஸ்

புலாவ் திக்குஸ்பினாங்கு மார்ச் 8. இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நோன்பு திறப்பு விழாவையும் உலகில் கொண்டாடப்பட்டு வரும் மகளிர் தின விழாவையும் என் இல்லத்தில் ஏற்பாடு செய்து நடத்தினேன் என்றார் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் பினாங்கு மாநில தலைவி ஜரினா அப்துல்லா. 



இஸ்லாம் சமயத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில் நோன்பு இருப்பது ஒன்றாகும். நோன்பு இருப்பதின் வழியாகப் பசி அனுபவத்தைப் பெறுகின்றோம். பசி என்றால் என்ன என்பதை இறைவன் நமக்கு அறியச் செய்கிறார். உணவில்லாமல் பசியால் வாடுபவர்களின் பசி போக்க வேண்டும். ஏழைகளுக்கும் இந்த நாளில் உணவு தர வேண்டும் என்ற சிந்தனையைப் பெறுகிறோம்.ரமலான் மாதத்தின் 30 நாட்களுக்கு நோன்பு இருந்து ஜெபிக்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப் பட்டவர்கள், பொருளாதார வசதி குறைந்தவர்கள், ஆதரவற்றோர், தனித்து வாழும் தாய்மார்கள் போன்ற அனைவரும் மகிழ்ச்சியாக நோன்பு பெருநாளைக் கொண்டாட நம்மால் ஆன உதவியைச் செய்து வர வேண்டும். இதன் அடிப்படையில் இந்த நாளிலே 100 பேருக்கு அன்பளிப்பு பரிசு கூடைகள் வழங்கப்பட்டன என அவர் மேலும் கூறினார்.



இந்த நாளிலே உலகில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. \"மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா\" என்றார் கவிமணி. பெண்மை என்பது வெறும் பாலினம் சார்ந்த அடையாளம் அல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவம். இப்புவியின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் ஆதாரமாகப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆளுமைகளை இந்த நாளிலே நாம் ஏற்றுக் கொள்வது அவர்களுக்குத் தரும் அங்கீகாரம் ஆகும் என ஜரீனா கூறினார்.கடந்த 30 ஆண்டுகளாக நோன்பு திறப்பு விழாவை என் இல்லத்தில் கொண்டாடி வருகிறேன்.  நோன்பு திறப்பு முடிந்த பின்பு  நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கினோம்.



நோன்பு திறக்கும் விழாவும் மகளிர் தின விழாவும் சிறப்பாக நடைபெறப் பல்வகையிலும் பொருளாதார உதவி செய்த பர்கத் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ பர்கத் அலி, புலாவ் திக்கூஸ் ரஃபி உணவகத்தின் தலைவர் முகமட் ரஃபி, ஐ சாப் மசாலா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பச்சையப்பன், ஜப்பார் ஷேக் தாவூத் பேரோஸ், டத்தோ மேஜர் லத்தீப், மலாக்கா முன்னாள் தமிழ் மன்றத்தின் பரமசிவம் ஆகியோருக்கு அவர் நன்றி கூறினார். 


பெண்களுடைய தனித் திறமையை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களால்தான் உலகம் இயங்கி வருகிறது. அவர்களுடைய தாய் அன்பு போற்றப்படக்கூடியது. அவர்களை இந்த நாளிலே பெருமைப்படுத்த வேண்டும். ஒரு வீட்டின் விளக்காகப் பார்க்கப்பட்ட பெண்கள் இன்று உலகை ஒளிரச் செய்யும் கதிரவனாய் போற்றப்படுகிறார்கள். பெண்களின் பங்களிப்பு இன்றி உலகில் ஆண்களின் வாழ்க்கை முழுமை பெறாது எனத்  தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் கணேசன் தமதுரையில் கூறினார்.தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசிய உச்ச மன்ற உறுப்பினர் அண்ணாமலை அய்யாவு உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News