Alaioli
ஜொகூரில் டெங்கி பதிவுகள் 21.2% குறைவு

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, மார்.9 –ஜொகூர் மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் தொடர்பான பதிவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.


அவர் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டின் 9ஆம் தொற்றுநோய் வாரம் வரை மொத்தம் 928 டெங்கி பதிவுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 1,178 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 21.2 சதவீதம் குறைவாகும் என அவர் கூறினார்.


மேலும், 9ஆம் வாரத்தில் மட்டும் 74 பதிவுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகமான பதிவுகள் ஜொகூர் பாரு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அங்கு 53 பதிவுகள் பதிவாகியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கூலாய், கிளுவாங் மற்றும் பொந்தியான் மாவட்டங்களில் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.


அதேவேளை, இந்த வாரத்தில் ஜொகூர் மாநிலத்தில் 8 புதிய தொற்று பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், டெங்கி காரணமாக இந்த ஆண்டில் இதுவரை ஒரு மரணம் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, கொசு பெருக்கத்தைத் தடுக்க சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வாரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்கள் “தேடி அழிக்கும்” நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் லிங் தியான் சூன் அறிவுறுத்தினார்.


மேலும், டெங்கி தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் சமூக ஊடகங்கள் மற்றும் வானொலி வாயிலாக தொடர்ந்து மக்களிடம் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News