Alaioli
இந்து ஆலயங்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல, அவை தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் -  பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்து.

​ஜார்ஜ்டவுன், மார்ச் 10-மலேசியாவில் \"சட்டவிரோதக் கட்டிடங்கள்\" என்ற போர்வையில் இந்து ஆலயங்கள் அப்புறப்படுத்தப்படுவது, இந்த மண்ணின் வளர்ச்சிக்கு உழைத்த முன்னோர்களின் வரலாற்றை அழிக்கும் செயல் என உரிமை கட்சியின் இடைக்கால தேசியத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


​அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக இந்து அமைப்புகள் வரலாற்று உண்மைகளை அடகு வைக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவரது அறிக்கையின் முக்கிய சாராம்சதில் 


​1. ஆவணங்கள் இல்லை என்பதால் \'சட்டவிரோதம்\' ஆகாது

​காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ரத்தம் சிந்தி உழைத்த நமது பாட்டன், பூட்டன்மார்கள் தங்களின் ஆன்மீகத் தேவைக்காகக் கட்டிய ஆலயங்கள் இவை. அன்றைய சூழலில் முறையான ஆவணங்கள் பெறப்படவில்லை என்பதற்காக, இன்று அவற்றைச் சட்டவிரோதம் என முத்திரை குத்துவது அறமற்ற செயல். இது வெறும் நிலப் பிரச்சனை அல்ல, வரலாற்றுப் பதிவு.


​2. தீவிரவாதக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போகலாமா?

​\"சட்டவிரோதக் கோவில்கள்\" என்ற சொற்கூடல் சமீபகாலமாகச் சில இனவாத மற்றும் மதத் தீவிரவாதக் குழுக்களால் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் சில இந்து அமைப்புகளும் அதே மொழியில் பேசுவது ஆபத்தானது. ஆட்சியாளர்களை மகிழ்விக்கச் சமூக அடையாளத்தைச் சிதைக்கக் கூடாது.


​3. நிறம் பிரிக்கும் \'குழந்தைத்தனமான\' அரசியல்

​ஆலயங்களை அவற்றின் நில உரிமை அடிப்படையில் வண்ணமிட்டு வகைப்படுத்துவதை இராமசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்:


​பினாங்கு உதாரணம்: 80 ஆண்டுகள் பழமையான \'சிவப்பு\' வகை கோவிலின் மூர்த்திகளை, \'பச்சை\' வகை கோவிலுக்கு மாற்றச் சொல்வது இந்து தர்மத்திற்கு எதிரானது.தெய்வத்தின் கருவறையை இடமாற்றம் செய்வது ஆன்மீக ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஏற்க முடியாத ஒன்று.


​4. அரசியல் மௌனமும் - இரட்டை வேடமும்

​கடந்த ஆண்டு மஸ்ஜித் இந்தியா பகுதியில் 130 ஆண்டுகள் பழமையான ஆலயம் அகற்றப்பட்டபோது, DAP, PKR, MIC உள்ளிட்ட கட்சிகள் அமைதி காத்தது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிமின் இந்த முடிவுக்குப் பிறகுதான் \"சட்டவிரோத ஆலயங்கள்\" என்ற முழக்கம் தீவிரவாதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


​முன்வைக்கப்படும் தீர்வுகள் - 

​ஒவ்வொரு ஆலயத்தையும் ஒரு தனித்துவமான வரலாற்றுப் பின்னணியுடன் அணுக வேண்டும்.​மாற்று இடமும், போதிய நிதியும் ஒதுக்காமல் ஆலயங்களை இடிப்பது நிறுத்தப்பட வேண்டும்.​சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாத ஆலயங்களுக்குப் பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும்.​அதிகாரத்தில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்தச் சமூகத்தின் அடையாளத்தை அடகு வைப்பது பேராபத்தில் முடியும் என்று பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி எச்சரித்தார்.

Post Image

Leave a Comment
Trending News