Alaioli
பவித்திரம் நிறைந்த புனித வழிபாட்டுத் தலங்களில் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்; டாக்டர் குணராஜ் எச்சரிக்கை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கிள்ளான் மார்ச் 9. நூறாண்டுகள் பழைமையான பவித்திரம் நிறைந்த புனிதமான வழிபாட்டுத் தலங்களைத் தகர்ப்பதிலும் அழிப்பதிலும் உள் நோக்கத்துடன் செயல்படும் வன்மம் வக்கிர குணமுடைய மனிதரின் தீய நடவடிக்கைகளை முற்றாக முறியடிப்பதில் இந்திய இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து வம்பு தும்புக்குப் போகாமல் உண்மையை நிலை நாட்டுவதில், சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவெடுக்க வேண்டிய காலச் சூழலில் இந்த நாட்டில் அனைவரும் தற்போது பயணித்து கொண்டிருக்கிறோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அறவழியில் பயணித்து ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வழிபாட்டுத் தலங்கள் அழிவில் இருந்து காப்பாற்ற ஆலய நிர்வாகத்தினருடன் ஒன்றிணைந்து செயல்படும்படி அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். சமூகத்தில் மோதலையும் கத்தி ஏந்தி களமிறங்கும் பாணியையும் தூர எறிந்து விட்டு, அன்பு காட்டும் நல்ல நெறி வழியில் தீய சக்திகள் வழிபாட்டுத் தலங்களில் நெருங்க விடாமல், அத்துமீறி பிரவேசிக்காமல் தடுத்து நிறுத்துவதில் இளைய தலைமுறையினரிடம் சாதுரியமும் அதை எதிர் கொள்ளும் சாணக்கியமும் அதிகம் வேண்டும் என்று டாக்டர் குணராஜ் அறிவுறுத்தினார்.


மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழிபாட்டுத் தலங்களில் பூஜை புனஸ்காரங்கள் நடத்தி அந்தத் தன்னம்பிக்கையுடன் நேரிய வழியில் பயணிக்க வேண்டும். அதே வேளையில், வழிபாட்டுத் தலங்களுக்கு ப் பாதிப்புகள் வரக் கூடும் எனில் வாளா இருக்காமல் ஆலய நிர்வாகத்தினருக்கு கூடுதல் ஒத்துழைப்பு நல்கி, ஒற்றுமையே பலம் எனும் கருத்தில் இந்த நாட்டில் நூறாண்டுகளுக்கு மேலாக உள்ள இந்து வழிப்பாட்டுத் தலங்களைத் தற்காப்பதிலும் பாதுகாப்பு வேலியாக இருந்து செயல் படுவதிலும் இளைய தலைமுறையினர் சிந்தித்து பொறுமையைக் கடைப்பிடித்து நமது உரிமைகளை நிலை நாட்டும்படி வேண்டி கேட்டுக் கொள்வதாக குணராஜ் அலை ஒளியிடம் தமது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Comment
Trending News