செ.குணாளன்
செபராங் ஜெயா, ஆக. 18 -
அருள்மிகு கருமாரி அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில், சிகரம் எட்வஞ்சரஸ் கிளப் மற்றும் தமிழர் மேம்பாட்டு சங்கம் இணைந்து, \"குடும்ப நல வேட்பு விழா\" எனும் இணையர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 42 இணையர்கள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் வே. அமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆ. சு. மலையரசன் மற்றும் டாக்டர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். குடும்ப வாழ்க்கையின் ஆழ்மையான அர்த்தங்களை உணர்த்தும் நிகழ்ச்சியை, உடல்–உயிர்–மனம்–அறிவு–ஆன்மா ஆகிய அனைத்தையும் தூய்மைப்படுத்தி ஆனந்தமான வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் திறமையான ஆசிரியை, தமிழகத்தைச் சேர்ந்த தயவு பிரபாவதி அம்மா அவர்கள் வழிநடத்தினார்.
விவாகரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற செபராங் ஜெயா கருமாரி அம்மன் ஆலயத் தலைவர் மற்றும் வழக்கறிஞரான வே. அமரேசன் அவர்கள்,
\"இன்றைய சமூகத்தில் கணவன்–மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, விவாகரத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குடும்ப ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் நோக்கில், இந்த நிகழ்ச்சியை மூன்று அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம். வழக்கறிஞராக இருக்கும் வகையில், நாட்டில் எத்தனை விவாகரத்து சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதற்கான புள்ளிவிவரங்களை நன்கு அறிந்திருப்பதால், மலேசியாவில் முதன் முறையாக இத்தகைய குடும்ப நல நிகழ்வை நடத்துவதில் பெருமைப்படுகிறோம் என்றார்.
இந்நிகழ்வில், கணவன்–மனைவி ஒருவரின் கையை ஒருவர் பிடித்து கண்களை மூடி, திருமண வாழ்க்கையின் இனிய தருணங்களை நினைவுகூர வழிநடத்தப்பட்டது. பின்னர், இயற்கை தத்துவம் அடிப்படையிலான உளவியல் பயிற்சிகளின் மூலம், ஒருவருக்கொருவர் மனமுவந்து மன்னிப்பு கோரி, கருத்து வேறுபாடுகளை மறந்து புதிய வாழ்வைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பங்கேற்ற பல இணையர்கள் இந்த அனுபவம் எங்களுக்குப் புதிதாகவும் உருக்கமாகவும் இருந்தது ஒருவரை ஒருவர் இன்னும் நெருக்கமாக உணர்ந்தோம் எனக் கூறினர்.
சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம்
குடும்பம் என்பது சமூகத்தின் அடித்தளமாகும். குடும்பங்களில் ஒற்றுமையும் புரிந்துகொள்வும் நிலைத்திருக்குமானால், அது சமூகத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும். இவ்விழா அதனை வலியுறுத்தும் விதத்தில் சமூகத்திற்கு நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது.
எதிர்காலத் திட்டங்கள்,
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, இதுபோன்ற குடும்ப நல வேட்பு விழாக்கள் பினாங்கு மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டுன் என்றும், குடும்ப ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உளவியல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வே.அமரேசன் கேட்டுக்கொண்டார்.