நிபோங் தெபால் அக்ஷயம் எண்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மழலையர் நட்சத்திர கலைவிழா 2025” மற்றும் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி நிபோங் தெபால் இந்தியர் சங்க மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
சிங்கப்பூர் தொழில்முனைவர்கள் டாக்டர் சின்னையா மற்றும் டாக்டர் ஜொபினா நாயுடு தலைமையில், மணிவண்ணன்–காந்திமதி தம்பதியினர் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
வடபுலத்து மழலைப் பாடல் பைங்கிளிகள் தங்கள் இனிய குரலால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தனர். சிறுவர்கள் பாடிய பாடல்கள், குழந்தைகளின் நடனங்கள் மற்றும் சிறு நாடகங்கள் நிகழ்ச்சிக்குத் தனித்துவம் சேர்த்தன. மேடையே வண்ண ஓவியமாய் மிளிர, சிறுவர்களின் சிரிப்பும் குரலும் ஒலித்தது. பெற்றோர்கள் உற்சாகக் குரல் எழுப்பி தங்கள் குழந்தைகளை ஊக்குவித்தனர்.
இந்த விழாவில் சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக, 25 ஏழை மற்றும் எளிய குடும்பங்களுக்கு தீபாவளி கொண்டாட்டத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், சிங்கப்பூர் டாக்டர் சின்னையா தலா ரிம.100 வீதம் 15 மாணவர்களுக்கு ரொக்க அன்பளிப்பு வழங்கி, கல்வி மற்றும் கலைத்துறையில் மேலும் முன்னேற வாழ்த்தினார்.
“சிறு துளி பெரும் வெள்ளம் என்கிறார்கள். சிறுவயதில் விதைக்கப்படும் கலைத்திறன், நாளைய உலக அரங்கில் மிளிரும் நட்சத்திரங்களாக உருவெடுக்கும் என்று டாக்டர் சின்னையா (சிங்கப்பூர் தொழில் முனைவர்) செய்தியாளர்களிடம் கூறினார்.
மணிவண்ணன் – காந்திமதி இணையரின் “செந்தாமரையே செந்தேன் இதழே” என்ற பாடல் நிகழ்ச்சியின் சிறப்புப் பொருளாக மாறியது. இனிமையும் உணர்வும் கலந்த அந்தப் பாடல் பார்வையாளர்களின் உள்ளங்களை கவர்ந்தது.
இந்நிகழ்ச்சிக்கு என் மண் என் மக்கள் இயக்கத்தின் தலைவர் ச. தியாகராஜ் முக்கிய ஆதரவை வழங்கினார். நிபோங் தெபால் காவல் துறை அதிகாரி துவான் ஆர். கோவின், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் க. செ. தியாகராசன் ஆகியோர் நிகழ்ச்சியை நேர்த்தியாகத் திட்டமிட்டு நிறைவேற்றினர்.
உள்ளூர் சமூக தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் கலந்து விழாவை மாபெரும் வெற்றியாக்கினர்.
தீபாவளி ஒளியின் தொடக்கம் போலவே, இந்த மழலையர் நட்சத்திர கலைவிழா சிறுவர்களின் கலைவாழ்வில் புதிய ஒளி ஏற்றி, நிபோங் தெபாலின் கலாச்சாரத்தையும் மனிதநேயத்தையும் மேலும் வெளிப்படுத்தியது.