Alaioli
கத்தாரில் நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டியில் பினாங்கு அசத்தல்!

9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் என்று வாகை சூடி  மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் பினாங்கு  மாநில சிலம்பக் கழகம்.


கத்தாரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் அனைத்துலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பினாங்கு மாநில சிலம்பக் கழகம் சிறப்பாக விளங்கி, மொத்தம் 18 பதக்கங்கள் — அதில் 9 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 4 வெண்கலங்கள் — வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி, மலேசியாவுக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.


மாநில தலைமைப் பயிற்றுனர் ரவிந்திரன் பூங்காவனம் தெரிவித்ததாவது:

“பினாங்கு மாநில சிலம்பக் கழகத்தின் வீரர்கள் மிகுந்த ஒழுக்கம், ஒற்றுமை, மற்றும் உடல்-மனத் தகுதியுடன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். இது நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம், என்றார்.

இந்தப் போட்டி கத்தாரில் அமைந்துள்ள ஹாரிஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் சிலம்ப மேம்பாட்டு மையம் இணைந்து, உலக அளவில் கடந்த அக்டோபர் 3, 2025 அன்று, பெருமைக்குரிய Aspire Dome அரங்கில் நடத்தப்பட்டது.


போட்டியில் கத்தார், இந்தியா, துபாய், அபூதாபி, சவுதி அரேபியா, இலங்கை, சுவிஸ்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மேலும், மலேசியாவின் சரவாக்கிலிருந்து மூன்று போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.


மலேசியாவை பிரதிநிதித்த பினாங்கு அணியில் தலைமைப் பயிற்றுனர் ரவிந்திரன் பூங்காவனம், குழு நிர்வாகி திருமதி சுசிலா கங்காதரன், மற்றும் ஒன்பது வீரர்கள் இணைந்திருந்தனர். அவர்கள்:

ரினிஷா மோகன்ராவ், தமிஷா பாலகுரு, ரனிஷா வசந்தகுமார், இமயன் காளியப்பன், விக்னேஸ்வரன் சுகுமாறன், தாரணி குணாளன், ஹேம்கிஷன் தனசேகரன், பவனா ராஜேந்திரன், மற்றும் பிரகாஷ் ரவிந்திரன்.

இவர்கள் தனித்திறன் மற்றும் கோம்பேட் (Combat) பிரிவுகளில் சிறப்பாக விளங்கி, ஒன்றாம் ரன்னர் அப் (1st Runner-Up) பட்டத்தை பெற்றதுடன், குழு பிரிவில் சம்பியன் பட்டத்தையும் வென்று, போட்டியிலேயே சிறந்த அணியாக திகழ்ந்தனர்.

இதன் மூலம் பினாங்கு மாநில சிலம்பக் கழகம் 2025 ஆம் ஆண்டின் அனைத்துலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டும், முதல் ஆசிய சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பினாங்கு மாநிலம் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பங்கேற்க பினாங்கு மாநில மாணவர்களுக்கு நிதி மற்றும் ஏற்பாட்டில் உதவுகரம் நீட்டிய

பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு,

துணை அமைச்சர் ஜக்டீப் சிங் டியோ,

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன்,

மேலவை உறுப்பினர் செனட்டர் லிங்கேஸ்வரன்,

மற்றும் கெடா மாநில சிலம்பக் கழகத் தலைவர் தனபாலன் ஆகியோருக்கு தலைமைப் பயிற்றுனர் ரவிந்திரன் பூங்காவனம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இளம் தலைமுறையினர் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவது, நமது கலாச்சாரத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் முயற்சி. இத்தகைய சாதனைகள் அவர்களின் கடின உழைப்பும், ஒற்றுமையும், அர்ப்பணிப்பும் காட்டுகின்றன என்றார்.

Leave a Comment
Trending News