மாலிம் நாவார்,ஆக31: சுதந்திர நாள் என்பது நமக்கான கொண்டாட்டத்தின் உச்சம் மட்டுமில்லை.அது வருங்கால நம்பிக்கையின் உத்தரவாதமும் கூட மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாள் வரும் போது நம்மிடையே ஏற்படும் எல்லையில்லா மகிழ்ச்சியும் மலேசியர் என்னும் உணர்வும் தனித்துவமானது என்றும் மேலும் அவர் கூறினார்.
தலைமுறைகள் தாண்டினாலும் சுதந்திர நாளில் தேசிய கொடியை கையில் ஏந்தும் போது ஏற்படும் மகிழ்ச்சியானது நம் நாட்டின் மீது நாம் கொண்டிருக்கும் தேசபக்தியின் உன்னதம் என்றார்.சிறுவர்கள் கையில் நாம் வழங்கும் தேசிய கொடியானது அவர்களின் எதிர்காலத்து நம்பிக்கையை விதைக்கும் உத்தரவாதமாகும்.
மலேசியா உலக நாடுகளில் தனித்துவமானது.பல்லினம் வாழ்ந்தாலும் இங்கு நிலவி வரும் ஒற்றுமை,புரிந்துணர்வு,சகிப்புத்தன்மை,மதநல்லிணக்கம்,ஒருமைப்பாடு என தொடரும் மலேசியர்களுக்கே உரிய உன்னதம் வேறு எங்கும் காணமுடியாது என்றும் தனது சுதந்திர நாள் வாழ்த்தில் பவானி குறிப்பிட்டார்.
சுதந்திரநாளின் உன்னதமும் அதன் பின்னணியில் நிகழ்ந்த அர்ப்பணிப்பு போராட்டங்களும் ஒவ்வொரு வீடுகளிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தி செல்ல வேண்டும்.நாளைய நம்பிக்கையான தலைமுறை உருவாக குழந்தைகள் தொடங்கி சிறார் வரை சுதந்திர உணர்வோடும் தேசபக்தியும் விதைக்கப்பட வேண்டும் என்றும் நினைவுறித்தினார்.
மாணவர்களிடையே பள்ளிகளில் ஆசிரியர்கள் விதைக்கும் தேசப்பற்று பிரமிக்க வைப்பதாக கூறும் சட்டமன்ற உறுப்பினர் மாணவர்கள் மெர்டேக்கா,மெர்டேக்கா. என்று முழங்கும் போது நாட்டின் நம்பிக்கையான எதிர்காலம் துளிர்விடுவதை காணவே முடிவதாக கூறினார்.
நம்மிடையே அரசியல் நிலையிலான கருத்தியல் வேறுபாடு இருக்கலாம்.வெவேறான மதம்,சமய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாம்.ஆனால்,நாம் அனைவரும் மலேசியர்கள்.இது நம் நாடு.நாம்.இந்நாட்டின் மக்கள் என்பதில் ஒருபோதும் பிரிவுகளோ,முரண்களோ இருந்ததில்லை.இதுதான் மலேசியர்களின் உன்னத மாண்பு என்று பெருமிதம் கொண்டார்.
இன்றைய இளம் தலைமுறைகள் நாட்டின் நாளைய நம்பிக்கைகள்.அவர்களிடையே மேலோங்கியிருக்கும் நாட்டுப் பற்றும் சுதந்திர உணர்வும் நிச்சயம் உலகரங்கில் இன்னும் வலுவான நனிச் சிறந்த மலேசியாவைக் கட்டமைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை என்றார்.
மக்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் மடானி அரசாங்கத்தின் கீழ் மேம்பாடும் பொருளாதார செழிப்பும் கண்டு வரும் நிலையில் ஒவ்வொரு மலேசியரும் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமன்றி நம்பிக்கையான எதிர்கால உத்தரவாதத்திற்கும் அரும்பணி ஆற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.
மெர்டேக்கா..மெர்டேக்கா...மேர்டேக்கா என்று முழங்கும் போது நாம் அனைவரும் மலேசியர்கள் என்று எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும் என பவானி கேட்டுகொண்டார்.